

மத்தியப் பிரதேசத்தில் காதலியின் முத்தத்தால், காதலன் ரூ.5,500 அபராதம் கட்டிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் முத்த அடையாளங்களுடன் வலம் வந்த காரின் உரிமையாளருக்குப் போக்குவரத்துப் போலீஸார் ரூ.5,500 அபராதம் விதித்துள்ளனர்.
மேலும், காரில் இருந்த அனைத்து முத்த அடையாளங்களையும் காதலனையே வைத்து அழிக்கச் சொல்லியுள்ளனர்.
வெளிநாடுகளில் நடக்கும் ஒரு ட்ரெண்டை பார்த்துவிட்டு, ஆதித்யா சிகர்வார் என்ற இளைஞரின் காதலி, அவரின் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை பதித்துள்ளார். கார் முழுவதும் முத்தங்களை பதிக்க சுமார் 4 மணிநேரம் ஆனதாம்.
உடல் முழுவதும் முத்தம் பதிக்கப்பட்ட காரை எடுத்துக்கொண்டு ஆதித்யா வெளியே சென்றுள்ளார். முத்த தடயங்களால் கார் சென்ற இடமெல்லாம் தனித்து தெரிந்துள்ளது.
உடனே சாலையில் சென்ற பலர் அதனை வீடியோ, போட்டோக்கள் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த கார் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அதில் தெரிந்த வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி போலீசார் காரின் உரிமையாளரை கண்டறிந்துள்ளனர்.
மேலும் காரையும் பறிமுதல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக (மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், வாகனத்தின் அசல் தோற்றத்தை மாற்றியமைத்ததற்காக) ஆதித்யாவிற்கு ரூ.5,500 அபராதம் விதித்துள்ளனர்.
தொடர்ந்து ஆதித்யா மன்னிப்புக்கோர காரை கொடுத்த போலீசார், லிப்ஸ்டிக் முத்த தடயங்களை அனைத்தையும் அவரை வைத்தே அழிக்கச் சொல்லியுள்ளனர்.