பெங்களூருவில் பரபரப்பு: காதல் மனைவியை கடத்திய ராஜஸ்தான் குடும்பம்- சினிமா பாணியில் கார் சேஸிங், 6 பேர் படுகாயம்

பூஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காரை மறிக்க முயன்றனர்.
Rajasthan
Published on
Summary

பெற்றோருக்குத் தெரியாமல் தப்பி வந்த இளம் தம்பதியினர், பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தசராஹள்ளி பகுதியில் வீடு எடுத்து அமைதியாக வசித்து வந்தனர்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனைத் திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வந்த 21 வயது இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் ஆட்களை அனுப்பி கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல்காரர்களின் காரை பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்துகளில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

காதல் திருமணம்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா(21) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ்(23) என்பவரும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பூஜாவின் குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பெற்றோருக்குத் தெரியாமல் தப்பி வந்த இளம் தம்பதியினர், பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தசராஹள்ளி பகுதியில் வீடு எடுத்து அமைதியாக வசித்து வந்தனர்.

கடத்தல் சம்பவம்

இந்நிலையில், நேற்று மாலை பூஜாவின் குடும்பத்தினரால் அனுப்பப்பட்ட நான்கு பேர் கொண்ட கும்பல், தம்பதியினரின் வீட்டிற்குள் புகுந்தது. ஓம் பிரகாஷை மிரட்டிய அக்கும்பல், பூஜாவை பலவந்தமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி கடத்த முயன்றது. பூஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் ்கத்தினர், உடனடியாக காரை மறிக்க முயன்றனர். ஆனால், கடத்தல்காரர்கள் காரை அதிவேகமாக இயக்கித் தப்பியோடினர்.

சினிமா பாணி சேஸிங்

சுதாரித்துக் கொண்ட பகுதி மக்கள், தங்கள் வாகனங்களில் கடத்தல் காரரை சினிமா பாணியில் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். இதனால் பீதியடைந்த காரை ஓட்டிச் சென்ற நபர், சாலையில் சென்ற பிற வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக மோதினார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3 பேர் கைது

காரை நிறுத்த முயன்ற பொதுமக்களை கடத்தல்காரர்கள் வெட்டுக்கத்தியால் தாக்க முயன்றதாகவும், கல்வீச்சு தாக்குதலுக்குப் பிறகே கார் நிறுத்தப்பட்டதாகவும் சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இறுதியில் பொதுமக்கள் காரைச் சூழ்ந்து பூஜாவை பத்திரமாக மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து விஜயநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், ராஜஸ்தானைச் சேர்ந்த ராகேஷ் (31), கரண் (25) மற்றும் அயான் (18) ஆகிய மூவரைக் கைது செய்துள்ளனர். தப்பியோடிய கார் டிரைவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com