பேட்டிங் அணியே நடுவரை தேர்வு செய்வது போல் உள்ளது: தேர்தல் ஆணையர் தேர்வு குறித்த வழக்கில் நீதிபதி கருத்து

இரண்டு நீதிபதிகளும் மாறுப்பட்ட கருத்துகளை தெரிவித்ததால் தலைமை நீதிபதி முடிவு செய்ய பரிந்துரை.
Supreme court
உச்சநீதிமன்றம்
Published on

தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் இருந்தனர். தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதில் தலைமை நீதிபதிக்குப் பதிலாக மத்திய அமைச்சர் ஒருவர் பெயரை சேர்ப்பது எனக் கூறப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனக்கோரப்பட்டது.

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்து

இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் ஷர்மா ஆகியோர் பெஞ்ச் விசாரணை நடத்தியது. இந்த பெஞ்ச் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது இருவரும் 5 நீதிபதிகள் கொண்ட அரசிலமைப்பு அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் தலைமை நீதிபதி இது குறித்து முடிவு செய்யலாம் என பரிந்துரை செய்தனர்.

இந்த தீர்ப்பின்போது, நீதிபதி திபங்கர் தத்தா கிரிக்கெட் போட்டியுடன் தேர்தல் ஆணையர்கள் தேர்வை ஒப்பிட்டு ஒரு கருத்தை தெரிவித்தார்.

கிரிக்கெட் நடுவர் தேர்வுடன் ஒப்பிட்ட நீதிபதி

பேட்டிங் செய்யும் அணியால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நடுவர், சரியான முடிவை வழங்கினாலும் கூட, அவர் அந்த அணிக்கு விசுவாசமானவராகவே கருதப்படுவார் என்பதால், எப்போதும் அவர் மீது ஒருவித சந்தேகம் நிலவும் என்றார் நீதிபதி திபங்கர் தத்தா.

தேர்தல் ஆணையர்கள் யாரால் நியமிக்கப்பட வேண்டும், யாரால் நியமிக்கப்படக்கூடாது என்பது குறித்த கருத்தை வலியுறுத்த, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான இந்த உதாரணத்தை பயன்படுத்தினார்.

நியமனங்கள் தொடர்பான 2023-ம் ஆண்டு சட்டம் அரசின் செல்வாக்கிலிருந்து விடுபட்டுள்ளதா என்பது குறித்த விசாரணையின்போது அவர் இந்தக் கருத்தைக் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் (மக்களவை) தவிர, பிரதமர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு அமைச்சர் ஆகியோரும் அந்த மூன்று பேர் கொண்ட தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ளதால், இதில் சந்தேகம் எழுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு சட்டரீதியான வாதத்தை முன்வைக்கப் பயன்படுத்தப்பட்ட இந்த உதாரணம், நீதிபதி தத்தாவிற்கு கிரிக்கெட் விளையாட்டின் மீதிருந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தியது நீதிபதிகளின் கிரிக்கெட் அணியான இந்திய தலைமை நீதிபதியின் பதினொருவர் (Chief Justice of India XI) அணியில் அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக (opening batter) விளையாடி வருகிறார்.

இந்த அணி பெரும்பாலும் பிற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அடங்கிய அணிகளுடன் விளையாடுவது வழக்கம். கிரிக்கெட் களத்தில் அதிரடியாக ரன்களைக் குவிக்கும் ஆட்டக்காரராக நீதிபதி தத்தா அறியப்படுகிறார்.

தலைமை நீதிபதி நீக்கப்பட்டால் பிரதமர் மற்றும் மத்திய மந்திரி ஆகியோர் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் இருந்தாலும் 2:1 என பிரதமர் முடிவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என சந்தேகம் எழும் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com