

மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழியில் பணிபுரியும் அறிவு இருப்பதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்தை திருத்த அம்மாநில அரசு முன்மொழிந்துள்ளது.
இதை மீறுபவர்களுக்கு அவர்களின் ஓட்டுநர் உரிமம் இடை நீக்கம் செய்யப்படவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகராஷ்டிராவில் புதிய விதிகளின்படி, ஒரு ஆட்டோ அல்லது டாக்சி ஓட்டுநருக்கு மராத்தி மொழியில் நடைமுறை அறிவு இல்லாவிட்டாலோ அல்லது அடிப்படை உரையாடலுக்கு தேவையான அளவு கூட மராத்தி பேச தெரியவில்லையென்றாலோ, அந்த ஓட்டுநருக்கு முதலில் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும்.
அந்த ஒரு மாத காலத்திற்குள் அவர் மராத்தி மொழியை கற்க தவறினால், அவரது ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக தடை காலத்திற்கு பிறகும் ஓட்டுநர் மராத்தி கற்க தவறினால், ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகராஷ்டிரா மோட்டார் வாகன விதிகள், 1989-இல் முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, மின்னணு மீட்டர் பொருத்தப்பட்ட மோட்டார் வாடகை காரின் ஓட்டுநர், மராத்தி மொழியில் பணிபுரியும் அறிவு பெற்றிருக்க வேண்டும் என மாநில அரசால் வெளியிடப்பட்ட வரைவு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் கூறுகையில், “இந்த திருத்தங்கள் மூலம் ஓட்டுநர்கள் தங்கள் பயணிகளுடன் உரையாடவும், அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்யவும் உள்ளூர் மொழியின் நடைமுறை அறிவு அவசியம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக ஏப்ரல் மாதம், மகராஷ்டிர அரசு மாநிலம் முழுவதும் உள்ள கால்டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி மொழி கற்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.