

எல். முருகன் ராஜினாமா செய்ததை அடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கான ஒரே பிரதிநிதியாக பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் இருந்து வந்தார். ஆனால், கடந்த 11-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வந்து சென்ற பிறகு, மூன்று நாட்கள் இடைவெளியிலேயே எல். முருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கூடுதலாக தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது பதவிக்காலம் 2030 ஏப்ரல் வரை இருந்தது. 2029ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடவே, பதவியை ராஜினாமா செய்வதாக அவர் விளக்கமளித்தார். ஆனால், இதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள இடத்திற்கு அடுத்த மாதம் அதாவது நவம்பர் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2030-ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில் நவம்பர் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடந்து அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கிடையே, தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் யாருக்காவது இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.