

மேற்கு வங்காள மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கைகாட்டா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் இந்தியா - வங்காள தேசம் எல்லை பகுதியில் அமைந்திருக்கிறது.
இந்த பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி தனது தாத்தா, பாட்டியுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அங்குள்ள கலாசார நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.
அப்போது அவளுக்கு செல்போன் அழைப்பு வந்தது. உடனே அந்த சிறுமி அங்கிருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை.
இதுபற்றி காவல் நிலையத்தில் மாணவியின் வீட்டார் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு வீட்டின் அருகே சற்று தொலைவில் மாணவியின் உடல் மீட்கபப்ட்டது. மாணவியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
மாணவியின் தலை மற்றும் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் கூறினர்.
இதை தொடர்ந்து பிரேதப் பரிசோதனை நடத்துவதற்காக ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட்டது, அதே நேரத்தில் குற்றம் நடந்த இடத்தில் இருந்து ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இதையடுத்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த வழக்கை விசாரிக்க, அப்பகுதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மாணவிக்கு நன்கு அறிமுகமான ஷிமுல் பூரை சேர்ந்த பிரகலாத் தாஸ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
சந்தேகத்தின்பேரில் பிரகலாத் தாசை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மாணவியின் தாயை பற்றி பேசியது தொடர்பாக மாணவிக்கும், பிரகலாத் தாசுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பான தகராறில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இதை தொடர்ந்து பிரகலாத் தாசை போலீசார் போங்கான் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து கோர்ட்டு அவரை 10 காவலில் வைக்க உத்தரவிட்டது.
இன்று அதிகாலை அவரை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். போங்கானில் நகரின் வெளியே வேனில் சென்றபோது திடீரென்று பிரகலாத் தாஸ் திடீரென்று போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சுட்டுவிடுவதாக மிரட்டியபடி தப்பிக்க ஓடினார்.
உடனே போலீசார் அவரை பின்னால் துரத்தினர். போலீசாரை பிரகலாத் தாஸ் தாக்கியதால் போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவருக்கு குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அவரை போலீசார் மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 4 மாதங்களில் மேற்கு வங்காளத்தில் நடந்த 2-வது என்கவுண்டர் சம்பவம்.
இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் பாருய்பூர் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் முக்கியக் குற்றவாளியான பிரபாஸ் மொண்டல் என்பவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.