

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்திய நபர்களுக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டு புரதம் வெளியேறியதை தொடர்ந்து, அந்த பொருட்களை இந்தியாவில் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம் என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அழகு சாதன விற்பனை மையங்களில், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட கோரி பியூட்டி கிரீம், சாந்தினி ஒயிட்டனிங் கிரீம் ஆகியவை உரிய அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இதையடுத்து மருத்துவர் பரிந்துரை இல்லாமல் அந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்திய 18 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறுநீரகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அழகு சாதன பொருட்களை பயன்படுத்தியவர்கள் உடம்பில் அளவுக்கு அதிகமாக சுமார் 100 முதல் 105 மடங்கு நச்சுத்தன்மை கொண்ட ‘பாதரசம்’ (mercury) இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்படவர்களின் சிறுநீரகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்களுக்கு மெம்ப்ரேனஸ் நெஃப்ரோபதி (Membranous Nephropathy) என்ற பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
இந்த வகையான சிறுநீரக பாதிப்பின் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து அதிகளவிலான புரதம் சிறுநீர் வழியாக வெளியேறி கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் அவர்களுக்கு புரத ஆண்டிஜென் ஆன NELL-1 தொற்று இருப்பதும் பரிசோதனையின் முடிவில் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து நாக்பூரை சேர்ந்த சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் மோனாலி சாஹூ கூறுகையில், “பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை பரிசோதித்ததில், பாதரசத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது” என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய நாக்பூர் போலீசார், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அழகுசாதன பொருள் நுகர்வோரை எப்படி சென்றடைந்தது என்பது கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த பொருட்கள் மருத்துவரின் பருந்துரைச்சீட்டு இல்லாமல் உள்ளூர் கடைகள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கோரி பியூட்டி கிரீம் மற்றும் சாந்தினி ஒயிட்டனிங் கிரீம், இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் அங்கீகரிக்கப்படாதவை என்றும், அவற்றில் அதிகளவில் நச்சுத்தன்மை கொண்ட உலோகங்கள் உள்ளதாகவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வகையான அழகு சாதன பொருட்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டாம் எனவும், முன்னதாக அவற்றை வாங்கி பயன்படுத்தியவர்கள் தங்கள் உடல்களில் ஏற்படும், முகம் அல்லது கால் வீக்கம், வழக்கத்திற்கு மாறான நுரைத்த சிறுநீர், சோர்வு போன்ற நோய் அறிகுறிகளை புறக்கணிக்க கூடாது என்றும் சிடிஎஸ்சிஓ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்த பொருட்கள் மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் உள்ளூர் கடைகள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.