எத்தனால் பெட்ரோல் சர்ச்சை: கர்நாடகாவை தொடர்ந்து பரிசோதனையில் இறங்கிய கேரளா

பெட்ரோலில் 20 சதவீதத்திற்குப் பதிலாக 31.2 சதவீதம் எத்தனால் கலந்து இருப்பது தெரியவந்தது.
E20 எத்தனால் பெட்ரோல்
E20 எத்தனால் பெட்ரோல்
Published on: 

கர்நாடகாவில் பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கேரள அரசும் பெட்ரோல் தரத்தை ஆய்வு செய்ய அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் விதிமுறைப்படி பெட்ரோலில் அதிகபட்சமாக 20 சதவீதம் எத்தனால் கலக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது E20 பெட்ரோல் என அழைக்கப்படுகிறது. ஆனால், கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஆய்வில் சில பெட்ரோல் மாதிரிகளில் 31.2 சதவீதம் வரை எத்தனால் கலந்திருப்பதாக அம்மாநில அரசு குற்றம்சாட்டியது. இதனை எண்ணெய் நிறுவனங்களும் மத்திய அரசும் மறுத்துள்ளன.

இந்த நிலையில், கேரள உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் அனூப் ஜேக்கப் பெட்ரோல் பங்குகளில் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார்.

சோதனைக்காக மாதிரிகள் சேகரிப்பு

இதன்படி திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த மாதிரிகள் அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்படும். இதன் முடிவுகள் 10 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

மைலேஜ் குறைவு

வாகனங்களின் மைலேஜ் குறைவு மற்றும் இன்ஜின் பாதிப்பு குறித்த புகார்கள் எழுந்துள்ள நிலையில், கேரள அரசின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

எத்தனால் கலப்பதால் ஏற்கனவே 10 சதவீதம் மைலேஜ் குறைவாக கிடைக்கும் நிலையில், அதன் அளவு அதிகரித்தால் மேலும் மைலேஜ் பாதிப்பு ஏற்பட்டு வாகனம் வைத்திருப்போருக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

X