

வட்டானப்பள்ளி அருகே 2008-ஆம் ஆண்டு DYFI அமைப்பின் உறுப்பினர் ஒருவரை கொலை செய்த வழக்கில், கடந்த 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி ஒருவரை திருச்சூர் ஊரக காவல்துறையினர் இன்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) உறுப்பினர் தணேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில், மூன்றாவது குற்றவாளியான ராகேஷ் என்பவரை, இன்டர்போல் உதவியுடன் 'ரெட் கார்னர் நோட்டீஸ்' மூலம் துபாயில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
சம்பவத்திற்குப் பிறகு அவர் வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திருச்சூர் சரக டி.ஐ.ஜி. நாராயணன் டி. அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திருச்சூர் ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகமது நதீம் தலைமையிலான புலனாய்வு குழுவினர் இவரை கைது செய்ததாக காவல் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகேஷ் வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, சி.பி.ஐ-இன் இன்டர்போல் பிரிவு மூலம் 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டு, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச மற்றும் நாடுகடத்தல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
குற்றவாளியை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடைமுறையின் ஒரு பகுதியாக, இங்கிருந்து மூன்று அதிகாரிகள் துபாய் சென்றனர். அங்கு 'ரெட் கார்னர் நோட்டீஸ்' அடிப்படையில் கடந்த நான்கு மாதங்களாக காவலில் வைக்கப்பட்டிருந்த ராகேஷை அவர்கள் பொறுப்பேற்று, கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விமான நிலையத்தில் வைத்து அவர் முறையாக கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி அரங்கேறியது. பா.ஜ.க. தொண்டர் சுஜித் என்பவரின் கொலையைக்கு பழிவாங்கும் நோக்கில், தணேஷை கொலை செய்யக் குற்றவாளிகள் சதி செய்ததாக காவல்துறை கூறுகிறது.
இந்த வழக்கில் மொத்தம் 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்; அவர்களில் முதல் ஆறு பேர் நேரடியாக கொலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் கார் மற்றும் மோட்டார்சைக்கிளில் வந்து, வாள் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களுடன், எங்கண்டியூர் திருமங்கலம் கோவிலுக்கு அருகிலுள்ள 'குடும்பவேதி வெல்ஃபேர் சொசைட்டி' முன்பாக, காலனி சாலை சந்திப்பில் தணேஷைத் தாக்கினர்.
அப்போது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த தணேஷை, குற்றவாளிகள் வாள் மற்றும் கோடாரிகளை கொண்டு கடுமையாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. தப்பி செல்ல முயன்ற தனேஷை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் துரத்தி சென்று வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதியன்று சாவக்காடு நீதித்துறை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறிய காவல்துறை, வழக்கின் விசாரணையை தொடங்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.