

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 6 வயதான சிறுவன் ஒருவன் தனது தந்தையை ரெயில் நிலையத்தில் தொலைத்துவிட்டு, வழி தவறி கேரளா செல்லும் ரெயிலில் ஏறியதை தொடர்ந்து, தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஹரிமாரா கிராமத்தில் 6 வயதான ராஜா கோப் என்கிற சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அப்போது ஒரு நாள் கோப், தனது தந்தையுடன் மேற்கு வங்கத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்காக சென்றார்.
பின்னர், கோப் வழி தவறி தனது தந்தையை தொலைத்துவிட்டு, ஜார்க்கண்ட் ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக, கேரளம் செல்லும் ரெயிலில் மாறி ஏறினார்.
இதையடுத்து அவர் எர்ணாகுளத்தில் இறங்கியபோது, குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் சிறுவனை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
6 வயதான கோப், தனது பெற்றோர்களின் பெயரையும், ஜார்க்கண்ட் பெயரையும் மட்டுமே நினைகூர முடிந்தது. அந்த தகவலை வைத்துக் கொண்டு, அவனது குடும்பத்தை கண்டுபிடிப்பது குழந்தை உரிமை ஆர்வலர்களுக்கு கடினமாக இருந்தது.
கேரளாவின் திருச்சூரில் உள்ள குழந்தைகள் நல குழு, தங்களிடம் இருக்கும் சிறுவன் தன்னை ஜார்கண்டின் சாய் வாசா பகுதியை சேர்ந்தவர் என கூறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தது.
கோப், ஒரு குன்றின் அருகே உள்ள பள்ளிக்கு அருகில் தனது வீடு அமைந்திருந்தது என்பதை மட்டுமே நினைவு கூர்ந்து விவரிக்க முடிந்தது.
இதைதொடர்ந்து, தற்போது 19 வயதாகும் கோப், கேரளாவில் கால்பந்தை மையமாக கொண்டு தனது வாழ்க்கையை அமைத்து கொண்டார்.
கோப் வழங்கிய பெயர்கள் மற்றும் பிற தகவல்களை வைத்து கேரள காவல் நிலைய அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்க்க தொடங்கினர்.
மேலும், காவல்துறையினர் இளைஞரின் அடையாளம் மற்றும் பிற தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பினர். இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இந்த தகவலை வைத்துக் கொண்டு, ஒரு குடும்பம் தங்களது மகனை தொலைத்து விட்டதாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து ஜார்க்கண்டை சேர்ந்த சிறப்பு காவல் குழுவினர், கேரளாவில் உள்ள திருச்சூருக்கு வந்து ஆவணங்களை சரிபார்த்து, கோப்பை ஜார்க்கண்டிற்கு அழைத்து சென்றனர்.
கோப் இறுதியாக தனது கிராமத்திற்கு திரும்பியபோது, ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்றாக வந்து அவரை வரவேற்றனர். மேலும், இளைஞரின் பள்ளி நண்பர்களும் ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து பழங்குடியின பெண்கள் பாரம்பரிய நடனமாடி கோப்பை வரவேற்றனர். 13 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை சந்தித்த அவனின் தாயும், நான்கு சகோதரிகளும் ஆரத்தழுவி அவரை கட்டிக்கொண்டனர்.
இந்த நிகழ்வு குறித்து கோப்பின் தாயார் கூறுகையில், "தனது மகன் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார்.
இருந்தாலும் கோப்பிற்கு கேரளாவில் கால்பந்து போட்டிகள் இருப்பதாலும், அவன் தனது பள்ளி படிப்பை நிறைவு செய்ய இருப்பதாலும், தனது மகனை தடுக்க போவதில்லை" என தாயார் கூறினார்.
கோப்பிற்கு தனது ‘ஹோ’ என்ற பழங்குடியின மொழி மறந்துவிட்டதாகவும், தற்போது அவருக்கு மலையாளம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே தெரியும் என்றும் கூறினார்.
மேலும், தனது தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், நல்ல வேலைக்கு சென்றுவிட்டு தனது தாயையும், சகோதரிகளையும் கேரளாவிற்கு அழைத்து செல்ல உள்ளதாக கோப் தெரிவித்தார்.