

அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்க்கையை ஓட்ட திட்டமிடும் பலரும் அதற்காக பணம் செலவு செய்ய தயங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் லாட்டரி சீட்டுக்காக ஒருவர் ரூ.2 கோடி செலவிட்டுள்ளார்.
60 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கியும் பெரிய அளவில் அவருக்கு பரிசுகள் விழவில்லையாம். ஆனாலும் லாட்டரி மோகம் அவரைவிட்டு இன்னும் நீங்கவில்லை. படித்தவர்கள் நிறைந்த மாநிலம் என கூறப்படும் கேரளம் மாநிலத்தில் தான் இது நடந்துள்ளது.
கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டம் கரிவெல்லூர் அருகே உள்ளபாலக்குண்னு பகுதியை சேர்ந்தவர் பி.பி. ராகவன் (வயது 80). விவசாயம் செய்து வரும் இவர் 1967-ம் ஆண்டில் இருந்து அதிர்ஷ்டத்தை நம்பி லாட்டரி சீட்டுகளை வாங்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது 60 ஆண்டுகளை நெருங்கிய நிலையிலும் லாட்டரி சீட்டு வாங்குவதை அவர் விடவில்லையாம். என்றாவது ஒரு நாள் பம்பர் பரிசு அடிச்சுடும், நம் வாழ்க்கை மாறிடும் என்ற நம்பிக்கையில் விவசாய நிலம், மனைவி நகைகள் போன்றவற்றை லாட்டரிக்காக இழந்ததாக கூறப்படுகிறது.
இதுவரை ரூ.2 கோடி வரை லாட்டரி சீட்டு வாங்கிய இவருக்கு பரிசு என்பது சிலமுறை தான் கிடைத்துள்ளது. அதுவும் ஆயிரக் கணக்கில்தான். இதனால் கடன் தொல்லைக்கு ஆளான ராகவன், மனம் தளராமல் இன்று வரை லாட்டரி சீட்டு வாங்குவதை நிறுத்தவில்லை.
மேலும், இதுவரை தான் வாங்கிய லாட்டரி சீட்டுகளை வீட்டில் மூட்டையாக கட்டி வைத்துள்ளார். அவரது வீட்டில் 5 மூட்டை நிறைய பழைய லாட்டரி சீட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.