கேரள கன்னியாஸ்திரிகள் ஜாமினில் விடுவிப்பு: நேரில் சென்று வரவேற்ற பாஜக தலைவர்- CPIM விமர்சனம்

2 கன்னியாஸ்திரிகளை சத்தீஷ்கர் மாநில போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்துக்கு கேரள முதலமைச்சர் பிரணாயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
கேரள கன்னியாஸ்திரிகள் ஜாமினில் விடுவிப்பு: நேரில் சென்று வரவேற்ற பாஜக தலைவர்- CPIM விமர்சனம்
Published on

கேரள மாநிலம் அங்கமாலி எழுவூர் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர் மேரி. கண்ணூர் தலச்சேரி உதயகிரி திருச்சபையை சேர்ந்தவர் வந்தனா பிரான்சிஸ். இவர்கள் இருவரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள்.

சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ரெயில் நிலையத்தில் வைத்து இந்த 2 கன்னியாஸ்திரிகளையும், சத்தீஷ்கர் மாநில நாராயண்பூர் பகுதியை சேர்ந்த சுக்மான் மண்டாவியையும் போலீசார் கைது செய்தனர்.

சுக்மான் மண்டாவி சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 18 மற்றும் 19 வயதுள்ள 3 இளம் பெண்களை கட்டாய மதம் மாற்றம் செய்யும் வகையில் கடத்தி 2 கேரள கன்னியாஸ்திரிகளிடம் கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வேலைக்கு அழைத்து வருவதற்காகவே அந்த 3 இளம் பெண்களை கன்னியாஸ்திரிகள் ரெயிலில் அழைத்து வந்ததாக கிறிஸ்தவ கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது. கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது நியாயமானது அல்ல. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பிரணாயி விஜயன் உள்பட பலர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

இதனையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளை கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

சத்தீஸ்கர் பாஜக அரசு கன்னியாஸ்திரிகளை கைது செய்த நிலையில், கேரளா பாஜக தலைவர் அவர்களை நேரில் சென்று வரவேற்ற இரட்டை நிலைப்பாட்டை சி.பி.எம்., காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com