

வாலிபர் சுஹைல் சஜீவ் காரை குடிபோதையில் ஓட்டி வந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள திருக்காக்கரை பகுதியில் கைவினை பொருட்கள் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் பாலக்காட்டை சேர்ந்த கோபிகா, வயநாட்டை சேர்ந்த தேவிகா, கர்நாடகம் மாநிலத்தை சேர்ந்த இஜாஸ் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் நேற்று இரவு வேலை முடிந்து திரும்பி சென்றுள்ளனர். அவர்கள் 3 பேரும் ஒரே ஸ்கூட்டரில் பயணம் செய்து வந்தனர்.
கொச்சி விமானநிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 3 பேரும் டீக்குடித்தனர். பின்பு அங்கிருந்து தங்களது ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றனர். அப்போது விமான நிலைய பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த ஒரு கார், வாலிபர் மற்றும் இளம்பெண்கள் வந்த ஸ்கூட்டரின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் ஸ்கூட்டரில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது ஸ்கூட்டர் மீது மோதிய காரை ஓட்டிவந்த வாலிபர் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தார். அவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், பொது மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆகவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து குறித்து நெடும்பச்சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் சாலையில் பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கார் ஓட்டிவந்த வாலிபரை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் சுஹைல் சஜீவ் என்பது தெரியவந்தது.
வாலிபர் சுஹைல் சஜீவ் காரை குடிபோதையில் ஓட்டி வந்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.