

மின் கசிவு காரணமாக மின் அழுத்தம் அதிகரித்து, குளிர்சாதன பெட்டி வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி நகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெலகாவி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சவத் காலி எனும் பகுதியில் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த குளிர்சாதனப் பெட்டி திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் உருவான தீ, நொடிப் பொழுதில் வீடு முழுவதும் பரவியதுடன், அடர்ந்த புகையும் சூழ்ந்து கொண்டது. அந்நேரத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியேற வழி தெரியாமலும், தப்பியோட முடியாமலும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தின் காரணமாக மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரை மீட்புக் குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின் கசிவு காரணமாக மின் அழுத்தம் அதிகரித்து, குளிர்சாதன பெட்டி வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.