

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் சுமார் 3 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோக்களை பார்த்தாலே நமக்கு தெரியும். அதன் மேற்கூரை மஞ்சள் நிறத்திலும், அடிப்பகுதி பச்சை நிறத்திலும் இருக்கும்.பெங்களூரு 'பசுமை தோட்டங்களின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.
அந்த பசுமையை காட்டுவதற்காகத்தான் பச்சை நிறம் கட்டாயம் ஆக்கப்பட்டது. இது அரசின் உத்தரவு ஆகும்.
புதிய உத்தரவு என்ன?
இந்த நிலையில் கர்நாடக அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அரசின் மானியத்தில், அதாவது அரசின் பண உதவியுடன் ஏழை தொழிலாளர்கள் வாங்கும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இனி மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
மஞ்சள், சிவப்பு என்பது கர்நாடக மாநில கொடியின் நிறம் ஆகும்.
ஏன் இந்த முடிவு?
இந்த வாகனங்கள் அரசின் உதவியால் வாங்கப்பட்டது என்பதை மக்கள் எளிதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
அத்துடன் அந்த வாகனங்களில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையும் இடம்பெறும்.
இந்த புதிய நிறம் கர்நாடக மாநிலத்தின் பெருமையை காட்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள பச்சை - மஞ்சள் நிறத்தையே வைத்திருக்கலாம் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.இந்த புதிய விதி எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என்று விரைவில் அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.