Digital Arrest: ஓய்வுபெற்ற நீதிபதியிடமே சைபர் மோசடி - ரூ.2.50 கோடி பறிப்பு

ஜெய்ப்பூரில் உள்ள ஜோதி நகர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து மோசடி நபர்களை தேடி வருகின்றனர்.
Cyber scam
Published on

ராஜஸ்தானில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி மேலாளர் போல் இணையவழியில் நடித்து, 90 வயதான முன்னாள் மாவட்ட நீதிபதியிடம் இருந்து ரூ.2.50 கோடியை மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முன்னாள் நீதிபதி

ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கண்பத் சிங் பண்டாரி என்பவர் முன்னாள் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தபோது, கடந்த ஜூலை 28ஆம் தேதி வாட்ஸ்அப் அழைப்பு மூலம் மோசடி நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

போலி சிபிஐ அதிகாரி

அப்போது அவர்களில் ஒருவர் காவல் சீருடை அணிந்துகொண்டு தன்னை மும்பையை சேர்ந்த சிபிஐ அதிகாரி என கூறியுள்ளார்.

இதையடுத்து வாட்ஸ்அப் அழைப்பு மூலம் தொடர்பு கொண்ட அந்த நபர், முன்னாள் நீதிபதியிடம், தங்களிடம் ரூ.50 கோடி மதிப்பிலான ஹவாலா பரிவர்த்தனை கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ.40 லட்சம் அவரது எஸ்பிஐ கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் இந்த புகார் குறித்து உங்களை கைது செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இந்த புகாரில் தங்களை கைது செய்யாமல் இருக்க, எங்களது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு மோசடி நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, முன்னாள் நீதிபதி தனது கணக்கில் இருந்து சுமார் ரூ.2.5 கோடி ரூபாயை மோசடி நபரின் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். இந்த சம்பவம் குறித்து உங்கள் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டாம் எனவும், அந்த மோசடி நபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போலி ரிசர்வ் வங்கி மேலாளர்

பின்னர், சிறிது நாள் கழித்து மற்றொரு நபர் நீதிபதியை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு, தன்னை ஒரு ரிசர்வ் வங்கி மேலாளர் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த மோசடி நபர் நீதிபதியிடம், ஹவாலா பரிவர்த்தனை தொடர்பான பணத்தை தாங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அந்த நிதி முதலீடுகள் குறித்த விவரங்களை தன்னிடம் தெரிவிக்குமாறும் மோசடி நபர் கூறியுள்ளார்.

இதற்கிடையே நீதிபதி, பயம் மற்றும் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் தனது மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பிற நிதி ஆவணங்களின் விவரங்களை மோசடி நபருடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார்.

பின்னர் மோசடிக்காரர்கள் நீதிபதியிடம், அவரது பென்சன் கணக்கிலிருந்து பணத்தை மாற்றுமாறு கேட்டுள்ளனர். ஒவ்வொரு உரையாடலுக்கு பிறகும், மோசடி நபர்கள் வாட்ஸ்அப் தகவல்களை அழிக்குமாறு கூறியுள்ளனர்.

நீதிபதி பென்சன் பணத்தை பறிமாற்றம் செய்வதற்காக எஸ்.பி.ஐ வங்கியின் ஜோஹரி பஜார் கிளையை அணுகியுள்ளார். அப்போது வங்கி மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டு அந்த பண பரிவர்த்தனையை நிறுத்தியுள்ளார்.

முதல் தகவல் அறிக்கை

இதையடுத்து நீதிபதியிடம் விசாரித்த வங்கி மேலாளர், அவர் இணையவழி மோசடிக்கு ஆளாகியிப்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதியின் மருமகன் ரவீந்திர சிங் மோனோட் அளித்த புகாரின் பேரில், ஜோதி நகர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நீதிபதிக்கு ஜூலை 28 அன்று அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வந்துள்ளது தெரியவந்தது.

முன்னாள் நீதிபதியை மோசடி நபர்கள் சுமார் 15 நாட்கள் 'டிஜிட்டல் காவலில்' வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோசடி நபர்கள் நீதிபதியிடம் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுமாறும் கூறியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாட்ஸ்அப் மூலம் மோசடி

முன்னாள் நீதிபதி ஆகஸ்ட் 3 முதல் 10 ஆம் தேதிக்குள் காந்தி நகரில் உள்ள எஸ்பிஐ கணக்கிலிருந்து ரூ. 2,50,51,000 (ரூ. 2.5 கோடி) பணத்தை மாற்றியுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள ஜோதி நகர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, ஆன்லைன் இணைய வழியில் மோசடியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com