

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தாயார் ரூபி சோரன், தனியார் மருத்துவமனையில் இன்று (புதன்கிழமை) மாலை காலமானார் என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவருக்கு வயது 80.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான மறைந்த ஷிபு சோரனின் மனைவியான இவர், உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
"இங்கு அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஹேமந்த் சோரனின் தாயார் ரூபி சோரன் இரவு 8.30 மணியளவில் காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக அவர் செப்டம்பர் 18 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்," என்று ஹில் வியூ மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் நிதேஷ் பிரியா தெரிவித்தார்.
ரூபி சோரன் பல உடல்நலச் சிக்கல்களால் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். "அவருக்கு புதன்கிழமை வென்டிலேட்டர் ஆதரவு அளிக்கப்பட்டது," என்றும் அவர் கூறினார்.
மருத்துவர்கள் குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்ததாக டாக்டர் பிரியா தெரிவித்தார். முன்னதாக அன்றைய தினம் முதல்வர் மருத்துவமனைக்கு சென்று அவரை சந்தித்திருந்தார்.
ஷிபு சோரனின் நெருங்கிய கூட்டாளியும் பா.ஜ.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன், ரூபி சோரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
"மறைந்த ஷிபு சோரன் அவர்களின் மனைவியான திருமதி ரூபி சோரன் அவர்களின் மறைவு செய்தி என் மனதை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஜார்க்கண்ட் இயக்க காலத்தின் பல நிகழ்வுகளும் நினைவுகளும் என் கண்முன் நிழலாடுகின்றன.
மாரங் புரு (பழங்குடியினரின் உயர்ந்த தெய்வம்) மறைந்த ஆன்மாவுக்கு அமைதியை அருளவும், குடும்பத்தினருக்கு வலிமையை அளிக்கவும் வேண்டுகிறேன்," என்று சம்பாய் சோரன் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவை சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோவும் ரூபி சோரனின் மறைவுக்குத் துயரம் தெரிவித்தார்.
ரூபி சோரன் 1999-ல், அப்போது பிரிக்கப்படாத பீகாரின் பகுதியாக இருந்த டும்கா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்; ஆனால் மூத்த பாஜக தலைவரான பாபுலால் மராண்டியிடம் 5,000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது கணவர் இறக்கும் வரை அவரை பராமரிப்பதிலேயே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் மறைவுக்குப் பின் வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை, தனது கணவருக்காக அவர் பெற்றுக்கொண்டார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்து விழாவில் பங்கேற்ற ரூபி சோரனுக்கு விருதை வழங்குவதற்காக, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்றது ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. தனது மகன் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.