மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுகளை ரத்து செய்தது ஜார்க்கண்ட் அரசு

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் தேர்வு சீர்திருத்த குழு ஒன்றை அமைப்பதாகவும் அவர் அறிவித்தார்.
Jharkhand Protestors
Published on

பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், JSSC-CGL தேர்வு மற்றும் 2014 முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL-ஆல் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்தார்.

தேர்வு ரத்து மற்றும் சி.பி.ஐ. விசாரணை கோரி மாணவர்கள் போராட்டம் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமைச்சரவை கூட்டம்:

முதல்வர் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையின் நீண்ட நேர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வை (JSSC-CGL) ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், வெளிமுகமை நிறுவனமான TDPL (TSR Data Processing Pvt Ltd) நடத்திய அனைத்துத் தேர்வுகளையும், அந்த நிறுவனம் வெளியிட்ட தேர்வு முடிவுகளையும் ரத்து செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு சோரன் கூறினார்.

தேர்வு சீர்திருத்த குழு:

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் தேர்வு சீர்திருத்த குழு ஒன்றை அமைப்பதாகவும் அவர் அறிவித்தார். பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வரும் வேலை தேடுபவர்கள், சி.பி.ஐ. விசாரணை மற்றும் JSSC-CGL தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் இன்றுடன் (திங்கள்கிழமை) 24-ஆவது நாளை எட்டியது; இதில் ஆறு போராட்டக்காரர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை:

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பிரதிநிதிகளுடன் ஜார்க்கண்ட் மாநில அரசு இன்றும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஏற்கனவே பலக்கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளில் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு தற்போது அறிவித்து இருக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com