இந்து முறைப்படி மீண்டும் திருமணம் செய்த ஜப்பானிய தம்பதி

லக்னோ கோமதி நகரில் உள்ள ராதா-கிருஷ்ணா கோவிலில் கடந்த 23-ம் தேதி இவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்து முறைப்படி மீண்டும் திருமணம் செய்த ஜப்பானிய தம்பதி
Published on: 
Summary

கடந்த 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்த ஜப்பானிய தம்பதியினர், தங்களின் இந்திய நண்பர்களின் ஊக்குவிப்பால் மீண்டும் இணைந்து, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோவிலில் இந்து முறைப்படி மறுமணம் செய்துகொண்டுள்ளனர்.

விவாகரத்து

ஜப்பானைச் சேர்ந்த ஹிரோ சிஹாரா மற்றும் ஷிசு ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பிரிந்திருந்த இந்தத் தம்பதியினரை அவர்களின் இந்திய நண்பர்கள் சமாதானப்படுத்தி, உறவிற்கு மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு ஊக்குவித்தனர். இதன் பயனாக 2023-ம் ஆண்டில் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்தனர்.

மீண்டும் திருமணம்

இந்நிலையில், தங்களின் இந்திய நண்பர் பங்கஜ் ஜோஷியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஹிரோ சிஹாரா - ஷிசு தம்பதியினர் தங்களின் மூன்று குழந்தைகளுடன் கடந்த 21-ம் தேதி லக்னோ வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற இந்தியத் திருமணச் சடங்குகள் மற்றும் பாரம்பரியத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அந்தத் தம்பதியினர், தாங்களும் இந்து முறைப்படி மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பினர்.

இதனையடுத்து, லக்னோ கோமதி நகரில் உள்ள ராதா-கிருஷ்ணா கோவிலில் கடந்த 23-ம் தேதி இவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பாரம்பரிய இந்திய உடைகளான குர்தா-பைஜாமா மற்றும் சல்வார் அணிந்து வந்த தம்பதியினர், மாலை மாற்றிக்கொண்டும், அக்னி குண்டத்தைச் சுற்றி வலம் வந்தும் நெற்றியில் குங்குமம் இட்டும் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். தங்களின் மூன்று குழந்தைகள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மணமகன் ஹிரோ சிஹாரா கூறுகையில், "இந்தியாவின் மீதான அன்பால் எங்களது மறுமணத்தை இங்கேயே நடத்த விரும்பினோம். இந்து முறைப்படி இவ்வளவு அழகான திருமணத்தைச் செய்துகொண்டது எங்களுக்கு மிகவும் விலைமதிப்பற்ற அனுபவமாகும்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இவர்களது திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகின்றன.

X