

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அரசு நடத்தி வரும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
ஆர்எஸ்எஸ் உடன் இணைந்த வலதுசாரி மாணவர்கள் அமைப்பான ஏபிவிபியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடதுசாரி மாணவர்கள் அமைப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே நேற்று காலை பல்கலைக்ககழக வளாகத்தில் மோதல் ஏற்பட்டது.
இதில் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தெற்கு கொல்கத்தாவில் உள்ள பலக்லைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.
முன்னதாக நேற்று முன் தினம் நடந்த 'இன்ஜீனியர்கிங் அண்ட் டெக்னாலஜி யூனியன்' மீட்டிங்கில் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னணியில் நேற்று இந்த கைகலப்பு நடந்துள்ளது.
மாணவர்கள் அல்லாதோரை வெளியில் இருந்து அழைத்து வந்து தங்களை தாக்கியதாக இரு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த அம்மாநில அமைச்சர் திலீப் கோஸ் இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், "ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் சில குழுக்கள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. தேசத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்புவது உள்ளிட்டவற்றில் அவை ஈடுபட்டு வருகின்றன.
மரியாதைக்குரிய ஆளுனரிடத்திலும் அவமரியாதையாக நடந்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
ஒரு கல்வி நிறுவனத்தில் இதுபோன்ற தேசவிரோத, சமூக விரோத செயல்கள் அனுமதிக்கப்படாது. அவை நிறுத்தப்பட வேண்டும்.
மாணவர் அரசியல் என்பது எப்போதுமே இதுபோன்ற பதற்றங்களை ஏற்படுத்துகிறது. நேற்று நடந்த வன்முறை குறித்த உண்மைகளை காவல்துறை கண்டறியும்.
பல்கலைகழக வளாகத்தில் நடப்பட்டவற்றுக்கு பல்கலைக்கழக துணை வேந்தரும் பொறுப்பேற்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் அமைதியும், ஒழுங்கும் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்தும் வெளியாட்கள் வந்தனரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக துணை வேந்தர் சிரஞ்சிப் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
பொழுது சாய்ந்த பிறகு வெளியாட்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.