

அம்பானி, அதானிக்காகத்தான் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வரும்நிலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானிதான் இந்தியாவின் உண்மையான எஜமானா என்று அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவைக்கு இந்தியாவில் வணிக ரீதியான உரிமம் வழங்கப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வரும்நிலையில் எலான் மஸ்க்கின் இந்த கேள்வி வந்துள்ளது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பயனர் ஒருவரின் பதிவை மறுபதிவிட்டு பகிர்ந்துள்ள எலான் மஸ்க்.,
“ஸ்டார்லிங்க் நிறுவனம் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளது; மேலும், இந்திய அரசின் அனைத்து விதமான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் கடந்த 5 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது. அப்படியிருக்க, இன்னும் ஏன் உரிமம் வழங்கப்படவில்லை?
இந்தியாவின் உண்மையான எஜமான் அம்பானிதானா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்தப் பதிவு இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், ராகுல் காந்தி, மஸ்க்கின் பதிவைப் பகிர்ந்து, “அடுத்த நபரையும் (அதானி) நீங்கள் கண்டறியும் வரை பொறுத்திருங்கள்” என்று மத்திய அரசைக் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டு வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தியத் தகவல் தொடர்பு அமைச்சகம் இதற்கு அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொலைத்தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் சேவைகளுக்கான விதிமுறைகள் மிகவும் நியாயமானவை; அனைவருக்கும் சமமானவை. இதில் யாருக்கும் சாதகமாகவோ அல்லது ஒருதலைப்பட்சமாகவோ அரசு செயல்படவில்லை. மஸ்க்கின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை.
ஸ்டார்லிங்க் மட்டுமின்றி, முகேஷ் அம்பானியின் ஜியோ சாட்காம் மற்றும் சுனில் மிட்டலின் யூடெல்சாட் ஒன்வெப் ஆகிய மூன்று நிறுவனங்களுக்குமே முதற்கட்ட உரிமங்கள் வழங்கப்பட்டுவிட்டன.
ஆனால், பாதுகாப்புத் தணிக்கை (Security Assessment) மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு (Spectrum approvals) ஆகிய இறுதி நடைமுறைகள் முடியும் வரை எந்த ஒரு நிறுவனமும் இந்தியாவில் வணிக ரீதியான சேவையைத் தொடங்க முடியாது. தற்போது இந்த மூன்று நிறுவனங்களின் பாதுகாப்புத் தணிக்கைகளும் ஒரே கட்டத்தில்தான் பரிசீலனையில் உள்ளன என தெரிவித்துள்ளது.