

வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்த ஒரு பயணிக்கு பரிமாறப்பட்ட பருப்பு வடையில் இரும்பு நட்டு இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பெங்களூரு-பெலகாவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்த ஒரு பயணிக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது.
காலை உணவாக வழங்கப்பட்ட பருப்பு வடைக்குள் ஒரு பெரிய உலோக போல்ட் இருந்தது கண்டறியப்பட்டது.
அதிர்ச்சியடைந்த அந்தப் பயணி, அதை வீடியோவாகப் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு தன் மனக்குமுறலை வெளியிட்டார்.
சமர்த் கோடியால் என்ற பயணி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அந்த வீடியோவில், அவர் தனது தட்டில் இருந்த வடையை இரண்டு துண்டுகளாக வெட்டி, அதற்குள் இருந்த பெரிய போல்ட்டை காட்டினார்.
இது உணவின் தரத்தில் உள்ள ஒரு பெரிய குறைபாடு என்று அவர் கடும் கோபம் கொண்டார். இந்த விவகாரத்தை ரெயில்வே உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்தப் பதிவு வைரலானதும், ரெயில்வே உணவின் தரம் குறித்து இணையவாசிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
பயணச்சீட்டிற்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் தரமான உணவு கிடைப்பதில்லை என்று நொந்து கொண்டனர்.
இனி உணவு தயாரிக்கும் மையங்களில் உலோகம் கண்டறியும் கருவிகளை பொருத்த வேண்டும் என்றும் கிண்டலாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்திற்காகப் பயணிகளிடம் மன்னிப்புக் கோரிய ஐ.ஆர்.சி.டி.சி, சம்பந்தப்பட்ட உணவு சேவை வழங்குநர் மீது அபராதம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. .
சமையலறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் அது உத்தரவிட்டுள்ளது.