

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியானது.
பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடந்த 2024-ம் ஆண்டில் முழு உறுப்பினர்களாக இணைந்தன. இதனைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டில் இந்தோனேசியாவும் இணைந்ததால் முழு உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு, 'மீள்தன்மை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு' என்ற கருப்பொருளின் கீழ் டெல்லியில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த வருகையின்போது இரு நாடுகளின் உறவு மற்றும் போர்நிறுத்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தியா வருகை தந்தார். அப்போது, அமெரிக்காவுடனான போர்நிறுத்த விவகாரத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என கூறி அவர், ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து தொடர்பாக உறுதியும் வழங்கினார்.
அமெரிக்கா உடனான போர் தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் அதிபரின் இந்தியா வருகை உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.