

புனே நீதிமன்றத்திற்கு வந்திருந்த கொலைக் குற்றவாளி ஒருவரின் கை அரிவாளால் துண்டிக்கப்பட்டு அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் சந்தோஷ்நகர் கத்ராஜில் நில தகராறில் 26 வயதான உணவக உரிமையாளர் ஷுபம் சுபாஷ் சவானை கும்பல் ஒன்று கொலை செய்தது.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அமர் சாகோர் மற்றும் அவரது கூட்டாளிகளான கிரிஷ் சுபாஷ் பாபரே, யோகேஷ் பாபுராவ் டோரே ஆகியோருடன் கிவாலே என்பவரும் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் சிறையில் இருந்த கிவாலே நான்கு நாட்களுக்கு முன்பு வெளிவந்தார்.
இந்நிலையில் வழக்கு தொடர்பாக நேற்று சிவாஜிநகர் நீதிமன்றத்திற்கு வந்தபோது கிவாலே தாக்கப்பட்டார்.
2 ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர்கள் நீதிமன்றத்தின் வெளியே கிவாலேவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
கை துண்டிக்கப்பட்ட நிலையில் கிவாலே நடைபாதையில் கிடந்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடும் நடத்திவிட்டு அங்கிருந்து ஸ்கூட்டர்களில் ஏறி தப்பியுள்ளனர்.
படுகாயமடைந்த கிவாலே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்திலிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர்.
பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.