

அமெரிக்க அதிபராக 2-வது முறை பதவி ஏற்றதும், டொனால்டு டிரம்ப் உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினார். அமெரிக்காவுக்கு ஏற்றவகையில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த நாடுகள் மீது, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரி விதித்தார். இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரியாக 25 சதவீதம் வரி விதித்தார். பின்னர், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால், கூடுதலா 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்தியாவின் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் உலகளவில் வர்த்தக இடையூறு ஏற்பட்டது. கொரோனா தொற்று காலத்தில் லாக்டவுன் போட்டது போன்ற சூழ்நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டன.
இந்த சவால்களை எல்லாம் எதிர்கொண்டு ஏற்றுமதியில் இந்தியா சாதித்துள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்தியா 863 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த தகவலை வர்த்தக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வர்த்தக துறையின் கூடுதல் செயலாளர் அஜய் பதூ கூறுகையில் "அமெரிக்காவின் வர்த்தக வரி விதிப்புகள் முதல் மேற்கு ஆசிய நெருக்கடிகள் வரை இது மிகவும் சவாலான ஆண்டாக அமைந்த போதிலும், ஏற்றுமதிச் சூழல் அமைப்பைப் பொறுத்தவரை இந்தியா மிகுந்த மீள்திறன் கொண்டது என்பதை நாம் நிரூபித்துள்ளோம். 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 863 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற வரலாற்றுச் சாதனை அளவை எட்டியது" எனத் தெரிவித்துள்ளார்.