வலுவான வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம்: ப்ளூம்பெர்க் பொருளாதார மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

அதிகாரம் யாரிடம் உள்ளது என்பது அல்ல; மாறாக அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதே ஆகும்" என்று தெரிவித்தார்.
Prime Minister Narendra Modi
Published on: 
Summary

தொழில்நுட்ப வளர்ச்சி, கிராமப்புறங்களில் ஸ்டார்ட்-அப், ஜிஎஸ்டி, தேவைக்கேற்ற சீர்திருத்தங்கள் என, இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான அம்சங்கள் சிறப்பாக இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ப்ளூம்பெர்க் பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து விரிவாகப் பேசினார். அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு காலகட்டத்திற்கும் அதிகாரத்திற்கான தனித்துவமான மூலங்கள் இருந்தன; ஆனால், 21 ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பம், தரவுகள் மற்றும் அறிவே உண்மையான அதிகாரமாக விளங்குகின்றன.

இன்று மிக முக்கியமான கேள்வி, அதிகாரம் யாரிடம் உள்ளது என்பது அல்ல; மாறாக அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதே ஆகும்" என்று தெரிவித்தார். மேலும், தொழில்நுட்பமும் அறிவும் ஒரு சிலரின் கைகளில் முடங்கிவிடாமல், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தனது 'அதிகாரமளிக்கும் அதிகாரம்' என்ற கோட்பாட்டை அவர் வலுவாக எடுத்துரைத்தார்.

டிஜிட்டல் புரட்சி

இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தின் வலிமையையும் சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் உள்ளதாகவும், வெளிப்படையான பொது விவாதங்கள் நமது பலம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "ஒரு தள்ளுவண்டி வியாபாரியும் ஒரு பெரிய கார் ஷோரூம் உரிமையாளரும் வணிக ரீதியில் வெவ்வேறானவர்களாக இருந்தாலும், இந்தியாவில் இருவரும் ஒரே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளத்தையே பயன்படுத்துகின்றனர். இதுவே அனைவரையும் உள்ளடக்கிய தொழில்நுட்பத்தின் உண்மையான சக்தியாகும்" என்றார். அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதால் ஊழல் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்

இந்தியாவின் புத்தாக்கத் திறன் மற்றும் தொழில் முனைவோர் சூழல் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் ஸ்டார்ட்-அப் துறை மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளதாகத் தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு சில நூறு எண்ணிக்கையில் மட்டுமே இருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், தற்போது 2,50,000-க்கும் அதிகமான எண்ணிக்கையைக் கடந்து அசுர வளர்ச்சி பெற்றுள்ளன.

குறிப்பாக, இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பாதியளவு சிறிய நகரங்களில் இருந்தே தொடங்குவதாகவும், அவற்றுள் 45 சதவீத நிறுவனங்களில் பெண்கள் இயக்குநர்களாக அல்லது கூட்டாளிகளாகப் பணிபுரிந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது நாட்டின் சிறு நகரங்கள் மற்றும் பெண் திறமையாளர்களின் பொருளாதார எழுச்சிக்குச் சிறந்த சான்றாகும்.

நிலையான பொருளாதார வளர்ச்சி

சர்வதேச அளவில் பல்வேறு பொருளாதார சவால்களும் நிலையற்ற சூழல்களும் நிலவினாலும், இந்தியப் பொருளாதாரம் மிக வலுவான அடிப்படைகளுடன் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாக பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். மத்திய அரசு எவ்விதக் கட்டாயத்திற்கும் ஆளாகாமல், நாட்டின் யதார்த்தமான வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு தொடர் சீர்திருத்தங்களைச் சீரான முறையில் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகளைப் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் அழைப்பு விடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com