

திருமணம் பேசி நிச்சயித்துவிட்டனர். ப்ரீ வெட்டிங் போட்டோஷுட் தொடங்கி ஹனிமூன் போட்டோஷூட் வரை இன்றைய தலைமுறையினர் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில் திருமண நாளன்று வேறு கச்சிதமாக சினிமா நடிகர் நடிகைகள் போல இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
ஆனால் எல்லோர் உடல்வாகும் இந்த ஆசைகளுக்கு ஒத்துழைப்பதில்லை. எனவே திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே வேகமாக எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, மணமக்கள் இப்போது உடற்பயிற்சிக்கு மாற்றாக Mounjaro என்ற எடை குறைப்பு ஊசிகளை நாடுகின்றனர் என்று கூறுகிறது ஒரு ஆய்வு.
குண்டாக இருப்பது குறித்த சமூகத்தின் கேலி மற்றும் விமர்சனங்களே பலரை இந்தத் தீவிரமான மருத்துவ முறையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகின்றன.
டெல்லியில் உள்ள 'கிளாரிட்டி ஸ்கின் கிளினிக்' போன்றவை, Mounjaro Bride என்ற பெயரிலேயே சிறப்புத் திட்டங்களை விளம்பரப்படுத்தி வருகின்றன.
கடந்த சில மாதங்களில் உடல் எடையைக் குறைக்கும் ஊசிகள் குறித்து விசாரிப்பவர்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை மணப்பெண்கள் தான் என டெல்லி பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரஜத் கோயல் கூறுகிறார்.
மும்பையைச் சேர்ந்த 26 வயது அதிதி, உடற்பயிற்சி மற்றும் டயட் செய்தும் பலன் கிடைக்காததால், திருமணத்திற்கு முன் மவுஞ்சாரோ ஊசியைப் பயன்படுத்தி 10 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
திருமணத்தன்று தன்னம்பிக்கையுடன் இருக்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறுகிறார்.
மவுஞ்சாரோ
Eli Lilly நிறுவனத்தின் 'Mounjaro', இந்தியாவில் நீரிழிவு மற்றும் உடல் எடையைக் குறைக்க அனுமதி பெற்ற முதல் GLP-1 மருந்தாகும்.
இதை ஒரு உடனடித் தீர்வாகக் கருதக் கூடாது என்றும், கட்டாயம் மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது மற்றும் சட்டவிரோத விற்பனை குறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியமும் கவலை தெரிவித்துள்ளது.
ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சிக்கு மாற்றாக மருந்துகளை நாடுவது நீண்ட கால அடிப்படையில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கையாக உள்ளது.