இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி உத்தரகண்ட் மாநிலத்தில் தொடக்கம்

சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும், கூட்டு திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவும்.
India - US military exercise
Published on

இரு நாட்டு படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளவும், அதே வேளையில் இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்தவும் நோக்கமாக கொண்ட இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவங்களின் கூட்டு பயிற்சியான 'யூத் அப்யாஸ்', தொடங்கியது.

இப்பயிற்சியின் 22-ஆவது பதிப்பிற்கான தொடக்க விழா உத்தரகண்ட் மாநிலம் அவுலியில் உள்ள 'அவுலி வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில்' நடைபெற்றது. இப்பயிற்சி அவுலி மற்றும் ராஜஸ்தானில் உள்ள மகாஜன் கள துப்பாக்கி சூடு பயிற்சி மைதானம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயிற்சின் நோக்கம் இதுதான்:

"மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் 'ஒருங்கிணைந்த போர் அணிகளை' பயன்படுத்துவதற்கான இரு ராணுவங்களின் கூட்டுத் திறனை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்; இதில் காலாட்படை சார்ந்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வலுப்படுத்துவதுடன், சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும், கூட்டு திட்டமிடல் மற்றும் செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவும்," என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு தரப்பில் இருந்தும் தலா 600 வீரர்கள் பங்கேற்கும் இந்தப் பயிற்சியில், 14-ஆவது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அமரேஷ் குஞ்சன் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் 11-ஆவது வான்வழி பிரிவை சேர்ந்த 1-ஆவது காலாட்படை படைப்பிரிவுத் தளபதி கர்னல் பெஞ்சமின் ஜாக்மேன் ஆகியோர் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றினர் என்று அமைச்சகம் தெரிவித்தது.

போர் உத்திகள், நுட்பங்கள் & நடைமுறைகள்:

தொழில்நுட்ப பயன்பாடு இதில் முக்கிய கவனம் செலுத்தும் பகுதியாக இருக்கும். கண்காணிப்பு மற்றும் உளவு பணிகளுக்காக டிரோன்கள் மற்றும் தானியங்கி அமைப்புகளை பயன்படுத்துதல் மற்றும் நவீன ஆயுத அமைப்புகளின் செயல்விளக்கம் ஆகியவை இப்பயிற்சியில் அடங்கும்; இவை மகாஜன் கள துப்பாக்கி சூடு பயிற்சி மைதானத்தில் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

"இரு ராணுவங்களை சேர்ந்த துறைசார் நிபுணர்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பல-தள போர்முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களை பரிமாறி கொள்வார்கள்," என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியானது, இரு ராணுவங்களும் தங்கள் போர் உத்திகள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும், பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com