சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் சாதனை: முதல் காலாண்டில் இந்திய ஜிடிபி 7.8% வளர்ச்சி!

பொருளாதார நிபுணர்கள் மற்றும் ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்புகள் இக்காலகட்டத்தில் வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என்றே கணித்திருந்தன.
India's GDP grow
Published on

உலகளாவிய பொருளாதார மந்தநிலை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீதமாக உயர்ந்து அசத்தியுள்ளது. இது பொருளாதார நிபுணர்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்புகளை விட மிக அதிகம்.

எதிர்பார்ப்புகளை மிஞ்சிய வளர்ச்சி விகிதம்

பொருளாதார நிபுணர்கள் மற்றும் ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்புகள் இக்காலகட்டத்தில் வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என்றே கணித்திருந்தன. கடந்த 2025-26 நிதியாண்டின் இதே ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 6.9 சதவீதமாக மட்டுமே இருந்தது. தற்போது பதிவாகியுள்ள 7.8 சதவீத உயர்வு, இந்திய பொருளாதாரம் வலுவான வேகத்தில் இயங்கி வருவதை உறுதி செய்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் வணிக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், உள்நாட்டு நுகர்வு தேவைகள் வலுவாக இருந்தது இந்த வளர்ச்சிக்கு முக்கிய தூணாக அமைந்தது. மேலும், அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு மூலதனச் செலவினங்கள், உற்பத்தித்துறை மற்றும் கட்டுமானத்துறை ஆகியவற்றில் காணப்பட்ட வேகமான வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உதவியது.

வங்கி கடன் தேவை மற்றும் மூலதனச் சந்தையின் எழுச்சி காரணமாக இத்துறை 12.1% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து முன்னணியில் உள்ளது. உள்நாட்டு தேவை அதிகரிப்பால் உற்பத்தித் துறை 9.2% வளர்ச்சியடைந்துள்ளது. பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், விவசாயம் மற்றும் சார்ந்த துறைகள் 3.6% நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

இந்த சாதனை தொடக்கமானது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்க அழுத்தம் மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் போர்ப் பதற்றங்கள் ஆகியவை வரும் காலாண்டுகளில் கவனிக்கப்பட வேண்டிய சவால்களாக இருக்கும். தனியார் முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், இந்த வேகமான பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com