

மத்திய கலாச்சார அமைச்சகத்தால் நடத்தப்படும் ‘இந்தியா பினாலே 2026’ கலைக் கண்காட்சியின் முதன்மை நிகழ்ச்சி கூடமாக டெல்லியின் ஜந்தர் மந்தர் சேர்க்கப்பட்டுள்ளது.
அண்மையில் போராட்டக் களங்களின் பட்டியல்களில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
மேலும் கரப்பான்பூச்சி கட்சி அமைப்பும் போராட்டங்களை அறிவித்து வருகிறது.
இதனால் பாதுகாப்பு கருதி, கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக டெல்லியின் முக்கியப் போராட்டக் களமாக அறியப்பட்ட ஜந்தர் மந்தரை போராட்டம் நடத்த தடை செய்யப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்தது.
இந்தியா உட்பட பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, இலங்கை போன்ற 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேசக் கலைஞர்களின் படைப்புகள், சிற்பங்கள் மற்றும் நவீன டிஜிட்டல் கலை வடிவங்கள் பினாலே 2026 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
ஜந்தர் மந்தரின் பிரம்மாண்டமான வடிவியல் அமைப்புகள் இக்கலை நிகழ்ச்சிக்கு ஒரு சிறந்த பின்னணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜந்தர் மந்தர் மட்டுமின்றி டெல்லியின் செங்கோட்டை, குதுப் மினார், ஹுமாயூன் கல்லறை, புரானா கிலா மற்றும் லோதி கார்டன் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட முக்கிய பாரம்பரிய இடங்களும் இந்த பிரம்மாண்ட கலைத் திருவிழாவின் நிகழ்விடங்களாகப் பயன்படுத்தப்பட உள்ளன.
மத்திய அரசால் நடத்தப்படும் இந்த கலை நிகழ்ச்சி 108 நாட்கள் நடைபெறுகிறது. டிசம்பர் 4 முதல் 2027 மார்ச் 21 வரை நடைபெற உள்ளது.