

கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 'இந்தியா-சீனா' இடையிலான எல்லை வர்த்தகம், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாதுலா கணவாய் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக இரு நாடுகளுக்கு இடையேயான பருவகால எல்லை வர்த்தகம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா கணவாய், பண்டைய பட்டுப் பாதையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வணிகப் பாதையாகத் திகழ்கிறது.
மத்திய வணிக அமைச்சகம் மற்றும் சுங்கத்துறை வரைமுறைப்படுத்தியப் பட்டியலின்படி, கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், பாரம்பரியப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், அரிசி, சர்க்கரை மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட 36 வகைப் பொருட்கள் வர்த்தகத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த வர்த்தகப் பாதையில் இந்தோ-திபெத்திய எல்லைப் போலீஸ் படையினர் தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதல் முறையாக நாதுலா எல்லைப் பகுதியில் ITBP பெண் படைப்பிரிவும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த எல்லை வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே நடைபெறும். வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை வர்த்தகர்கள் எல்லை கடந்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக வர்த்தகம் முடங்கியதால் வாழ்வாதாரத்தை இழந்த எல்லைப்புறப் பகுதி வர்த்தகர்கள், போக்குவரத்து உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழிலதிபர்களுக்கு இது பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
எல்லைப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கிலும், இருதரப்புப் பொருளாதார உறவை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
1962 இந்திய-சீனப் போருக்குப் பிறகு 44 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த நாதுலா கணவாய் வர்த்தகம், கடந்த 2006-இல் மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர் 2020-இல் மீண்டும் முடங்கிய நிலையில், தற்போது இரு நாட்டு தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.