

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது. இதில் மொத்தம் 23 கட்சிகள் பங்கேற்கின்றன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில் அதில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
தொகுதி மறுவரையறைக்கான பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா கடந்த கூட்டத்தொடரில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முயற்சியால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் நடப்பு கூட்டத் தொடரில் மீண்டும் தாக்கல் செய்ய பாஜக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் விவாதம் இருக்கும்.
இதனிடையே தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து தவெகவுக்கு தாவியதை துரோகம் என திமுக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
எனவே கடந்த காலங்களில் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக செயல்பட்ட திமுக அதிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ் தலைமையிலான இன்றைய இந்தியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த சூழலில் டெல்லியில் கூட்டம் தொடக்கப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை விமர்சித்து ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்களில் உதயநிதி ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் எங்கள் முதுகில் அமர்ந்து முன்னேறிக்கொண்டு இருந்தது . அதன்பிறகு எங்கள் முதுகில் குத்தியது என்ற வாசகங்கள் அதில் இந்தியில் இடம் பெற்றுள்ளன.