

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் எல்.பி.ஜி. தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில் எல்.பி.ஜி. வெளிநாட்டு விநியோகத்தில் தடைகள் ஏற்படும்போது, அதனை சமாளிக்கும் வகையில் உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்திக்கான ஒரு புதிய மாற்று கட்டமைப்பை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை வீடுகளில் சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதையும், திடீர் இறக்குமதி பற்றாக்குறையால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் ஆகஸ்ட் 13 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 21 சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மூல உற்பத்தியாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 63,810 டன் ஒருங்கிணைந்த எல்பிஜி உற்பத்தி திறன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் வழக்கமான உள்நாட்டு உற்பத்தி அளவை விட கணிசமான அளவில் அதிகமாகும். மேலும் இந்த உற்பத்தி நாட்டின் தினசரி எல்.பி.ஜி. தேவையில் 70 சதவீதத்தை நோக்கமாக கொண்டு உற்பத்தி செய்யப்பட உள்ளது.
மேற்கு ஆசியாவில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தால் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் எரிவாயு உற்பத்தி செய்வதை விட, மிக அதிகளவில் எல்பிஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2025-2026ஆம் நிதியாண்டில், நாடு சுமார் 33.2 மில்லியன் டன் எல்பிஜி-யை பயன்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி தோராயமாக 13.1 மில்லியன் டன்களாக இருந்தது.
எனவே இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வெளிநாட்டில் இருந்து கணிசமான அளவில் எல்.பி.ஜி. இறக்குமதி செய்யப்பட்டது.
இந்தியா கடந்த நிதியாண்டில் சுமார் 21.3 மில்லியன் டன் எல்பிஜியை இறக்குமதி செய்துள்ளது. இது உள்நாட்டு சந்தை, வெளிநாட்டு விநியோகங்களை எந்த அளவிற்கு சார்ந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில் 2026 நிதியாண்டில் சராசரி உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் 35,900 டன்களாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 63,810 டன்கள் என்ற அதிகபட்ச கொள்ளளவு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டமைப்பின் கீழ் ரிலையன்ஸின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலைக்கு மிகப்பெரிய தனிப்பட்ட அளவில் ஒரு நாளைக்கு சுமார் 18,000 டன் எல்பிஜி உற்பத்தி திறன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் இயக்கப்படும் 18 சுத்திகரிப்பு நிலையங்கள் ஒன்றிணைந்து ஒரு நாளைக்கு சுமார் 31,470 டன்கள் எண்ணெயை சுத்திகரிக்கின்றன.
நயாரா எனர்ஜியின் வதினார் சுத்திகரிப்பு ஆலைக்கு ஒரு நாளைக்குச் சுமார் 4,480 டன்கள் உற்பத்தி பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ONGC மற்றும் GAIL இந்தியா உள்ளிட்ட மூல உற்பத்தி மற்றும் எரிவாயுத்துறை உற்பத்தியாளர்கள் இணைந்து, ஒரு நாளைக்கு மேலும் சுமார் 6,460 டன்கள் உற்பத்தி செய்கின்றனர்.
இந்த விநியோகமானது, அவசர காலங்களில் கூடுதல் வீட்டு உபயோக எல்.பி.ஜி. எங்கிருந்து கிடைக்கக்கூடும் என்பது குறித்து அதிகாரிகளுக்கு ஒரு தெளிவான கண்ணோட்டத்தை அளிக்கிறது.