

உத்தர பிரதேச மாநிலம் பரேலியின் பஹேரி பகுதியில், கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் இயங்கி வந்த சட்டவிரோத ஆயுத தயாரிப்பு நிலையத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். மேலும் இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட காவல்துறை மற்றும் சிறப்பு செயல்பாட்டு குழு (SOG) அடங்கிய கூட்டுப்படையினர், நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவில் அந்த இடத்தில் சோதனை நடத்தியதாகவும், அப்போது ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை கைப்பற்றியதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் அனுராக் ஆர்யா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் குர்ஜார் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் வழியாக தொடர்பில் இருந்ததும், ஆயுத விநியோகம் குறித்து அவர்களிடையே உரையாடல்கள் நடந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பல உரையாடல்கள் நீக்கப்பட்ட நிலையில், டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் சுகராஜ் சிங் (19), ஷானு மியான் (29), ஜீவந்தீப் சிங் (24) மற்றும் ஜஸ்னூர் சிங் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
விசாரணையின் போது, தாங்கள் இஷ்ரத் பெஹ்ல்வான் என்பவரிடம் இருந்து ஆயுதங்களை பெற்றதாக கைதானவர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறினர். இஷ்ரத் பெஹ்ல்வான் ஏற்கனவே ஆயுத கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைப்பற்றப்பட்ட பொருட்களில், 315-போர் (bore) ரக நாட்டு துப்பாக்கி, 9 மி.மீ. பிஸ்டல், 315-போர் ரக ரைபிள், தோட்டாக்கள், முழுமையடையாத இரண்டு 12-போர் ரக துப்பாக்கி குழாய்கள், வைஸ் மெஷின் மற்றும் ஆயுத தயாரிப்புக்கு தேவையான பிற உபகரணங்கள் அடங்கும்.
பஹேரி காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை கைது செய்யவும், ஆயுத விநியோக வலைப்பின்னல் குறித்து விரிவாக விசாரணை நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.