

மரணம் தான் தலைவிதி என்றால் சொந்த நாட்டில் மரணிப்பேன் என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து திரும்பினால் தனக்கு மரண தண்டனை காத்திருக்கிறது என்றபோதிலும், டிசம்பர் மாதம் டாக்கா திரும்பும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
மாணவர் போராட்டத்தால் வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 2024 இல் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்க்கப்பட்டது. நாட்டை விட்டு தப்பிய அப்போதைய பிரதமர் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதன் பின் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்தது. தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்தலில் வென்று தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு அமைந்தது.
இதனிடையே மாணவர் போர்த்தத்தின்போது அடக்குமுறையை கையாண்டு மனிதாபிமானதிற்கு எதிரான குற்றங்களை செய்ததாக ஷேக் ஹசீனா மீது வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை முடிவில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
மேலும் அவரை நாடு கடத்த கோரி வங்கதேசம், இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே சில மாதங்கள் முன்பு தான் டிசம்பரில் வங்கதேசம் திரும்ப உள்ளதாக ஹசீனா அறிவித்தார்.
இந்நிலையில், "மரணம்தான் என் தலைவிதி என்றால், என் சொந்த மண்ணில், என் சொந்த மக்களிடையே நான் இறக்க விரும்புகிறேன்" என்று செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது வருகையால் ஏற்படக்கூடிய அபாயங்களை அறிந்திருப்பதாகக் கூறிய ஹசீனா, "நான் திரும்பும்போது கைது செய்யப்படலாம், சித்திரவதை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால், என் மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை என்னால் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்றார்.