

ஸ்காட்லாந்தில் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பாக கலந்துகொண்டு பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
அப்போது, இந்திய குத்துச்சண்டை வீரர், தன்னிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் வீரர் குறித்து ஒரு நகைச்சுவையான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
கிளாஸ்கோவில் நடைபெற்ற ஆண்களுக்கான 90+ கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வால், 2015 உலக ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் (world military games) ஒரு பாகிஸ்தானிய வீரரை தோற்கடித்தபோது நடந்த ஒரு சம்பவத்தை, பிரதமர் மோடியிடம் கூறினார்.
அப்போது தோல்வியடைந்த பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் என்னிடம் கூறுகையில், “உங்கள் பெயர் நரேந்தர், உங்கள் பயிற்சியாளரின் பெயர் நரேந்தர், உங்களின் பிரதமரின் பெயர் நரேந்திரா. நான் நரேந்திரா என்ற பெயரை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன்” என்று அவர் கூறியதாக பகிர்ந்துகொண்டார்.
இதை பிரதமர் மோடி கேட்டதும், தனது சிரிப்பை அடக்க முடியாமல் நீண்ட நேரத்திற்கு சிரித்துக் கொண்டே இருந்தார்.
இதையடுத்து 55 கிலோ ஆடவர் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜதுமணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பாகிஸ்தானின் சுமாமா ரஹ்மானை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
அப்போது அவர் பிரதமர் மோடியிடம் கூறுகையில், “அது கார்கில் தினம், அன்றுதான் நான் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினேன். இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவன் என்பதால், நான் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.
நான் அவர்களை 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, அந்த வெற்றியை நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணித்தேன்,” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய மோடி, இந்த வெற்றியின் முக்கியத்துவத்தையும், அது கார்கில் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதையும் பாராட்டினார்.
மேலும் அவர், “அதை நினைவுகூர்கையில், குறிப்பாக நீங்களே படைகளைச் சேர்ந்தவர் என்பதால், உங்கள் பதக்கத்தை கார்கில் வெற்றியாளர்களுக்கு அர்ப்பணித்து நீங்கள் வெளிப்படுத்திய உணர்வு, அந்த வெற்றிக்குக் கூடுதல் பெருமையைச் சேர்த்தது என்று நான் உண்மையாகவே நம்புகிறேன்.
மேலும், நீங்கள் யாரைத் தோற்கடித்தீர்களோ, அவர்களைத்தான் தோற்கடித்தீர்கள்!” என்று மோடி கூறினார்.