

மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமது லத்தீஃப் பாட் கடந்த வாரம் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், ஐதராபாத்தின் இரண்டு முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பு நிகழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று, பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு 12 இடங்களில் தொடர் தாக்குதல்கள் நடத்தியது.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய 10 பேர் கொண்ட பயங்கரவாத குழு, தாஜ் நட்சத்திர ஹோட்டல், மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில்வே நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல்களை நடத்தியது.
இந்த பயங்கரவாத தாக்குதலில், 20 பாதுகாப்பு படையினர் உட்பட 166 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டு கடந்த 2012 நவம்பரில் தூக்கிலிடப்பட்டார்.
இடைத்தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு தொடர்புடைய ஜம்மு காஷ்மீரை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி முகமது லத்தீக் பட் என்பவரை, இந்த ஆண்டு நவம்பர் 18 அன்று பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
இந்த நிலையில் ஐதராபாத் காவல்துறையின் மின்னஞ்சலுக்கு, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிடம் இருந்து வெடிகுண்டு அச்சுறுத்தல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த மின்னஞ்சலில், கச்சிகுடாவில் உள்ள ஹோட்டல் டூரிஸ்ட் பிளாசா மற்றும் கச்சிகுடா ரெயில் நிலையத்தில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் நடத்தப்படவுள்ள இந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 300 பேரை கொன்றுவிடுவோம் என லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான முகமது லத்தீஃப் பட் மற்றும் அவரது கூட்டாளிகளை இந்திய ராணுவம் கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக, இந்த தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பயங்கரவாதிகள் குறிப்பிட்ட அந்த 2 இடங்கள், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள், ஹோட்டல்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாட்டை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.