

மத்தியப் பிரதேசத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியை மருத்துவமனையில் வைத்தே கணவன் சரமாரியாக தாக்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவப் பிரிவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
35 வயதான அந்தப் பெண் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஒரு பெண் - ஒரு ஆண் குழந்தை என இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறப்புக்கு பின் மருத்துவமனை மகப்பேறு வார்டுக்குள் வந்த 45 வயது கணவன்,
ஆண் குழந்தையை பெற்ற அதே வேளை ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததால் மனைவி மீது ஆத்திரம் அடைந்துள்ளார்.
தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் அப்பெண்ணின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.
அப்பெண்ணின் தந்தை, காவல்துறையிடம் அளித்த புகாரில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் அப்பெண் தாக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் அவர் தாக்குதலின்போது தனது மனைவியின் வாயை இறுக்கமாக மூடியதாகவும், அப்போது அவரின் மோதிரம் மற்றும் நகங்களால் அப்பெண்ணின் முகத்தைக் கீறியதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.