

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து அவதூறாகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய இந்துத்துவா சித்தாந்தவாதியும் வலதுசாரி அரசியல் விமர்சகருமான டி.ஜி.மோகன்தாஸ் கேரளா சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்ரிகா என்ற தனது யூடியூப் சேனலில் ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அவர் வெளியிட்ட வீடியோக்களில், ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து மோகன்தாஸ் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
அந்த வீடியோவில், "நான் மட்டும் பொறுப்பில் இருந்திருந்தால், ஜந்தர் மந்தரைச் சுற்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, போராட்டக்காரர்களைக் கலைந்து போக உத்தரவிட்டிருப்பேன். அவர்கள் கேட்காவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டு இருப்பேன். சிலர் உயிரிழந்தாலும் சூழல் சில மணிநேரங்களில் அமைதியாகிவிடும்" என்று அவர் பேசியிருந்தார்.
மேலும், டெல்லியில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டம் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு வழிவகுத்திருக்கும் என்றும், ஆனால் "அதுகுறித்து எந்த புகாரும் வந்திருக்காது, ஏனெனில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் பாலியல் வன்கொடுமையை விரும்புகிறார்கள், அதுமட்டுமின்றி, சில பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை ரசிக்கவும் செய்கிறார்கள்" என வீடியோவில் கொச்சையாக பேசியிருந்தார்.
இந்த வீடியோக்கள் தொடர்பாக இந்திய மாணவர் சங்கமான எஸ்எப்ஐ மற்றும் அகில இந்திய மாணவர் பெருமன்றம் ஏஐஎஸ்எப் ஆகிய மாணவர் அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கொச்சி, மட்டான்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று மாலையில் கஸ்டடியில் எடுக்கப்பட்ட மோகன்தாஸ், நள்ளிரவில் திருவனந்தபுரம் சைபர் காவல நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்.
வன்முறையைத் தூண்டுதல், பொய்யான தகவல்களைப் பரப்புதல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் இருந்து அந்தச் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
மோகன்தாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் திருவனந்தபுரம் சைபர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.