

இமாச்சல பிரதேச அரசு கைம்பெண்கள்(விதவைகள்) மற்றும் அனாதை குழந்தைகளுக்கான நலத்திட்டங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டர் ஒன்றுக்கு 60 பைசா கூடுதல் வரி விதித்துள்ளது.
இந்த திருத்தத்தின்படி, பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.5 வரை கூடுதல் வரி விதிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில வரிகள் மற்றும் கலால் துறை வெளியிட்ட அறிவிப்பில், கைம்பெண் மற்றும் விதவை வரி ஆகஸ்ட் 11ஆம் தேதி (நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் அதிவேக (high-speed) டீசல் விற்பனை செய்யப்படும் விற்பனை நிலையத்தில் இந்த கூடுதல் வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் வரி மூலம் வசூலிக்கப்படும் பணம், கைம்பெண் மற்றும் விதவைகள் நல நிதியில் வரவு வைக்கப்பட்டு, விதைவைகள் மற்றும் அனாதைகளின் நலனுக்கான பயன்படுத்தப்பட உள்ளது.
இமாச்சல பிரதேச சட்டமன்றத்தால் மார்ச் மாதம், இந்த மதிப்புக்கூட்டு வரி (திருத்த) மசோதா, 2026 நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது, பாஜக-வினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாகூர் கூறுகையில், “கைம்பெண்கள் மற்றும் அனாதைகளின் பெயரில் வரி விதிப்பதன் மூலம், வருவாயைத் திரட்ட அரசு முயல்கிறது.
இந்த எரிபொருள் விலை உயர்வால், அண்டை மாநிலங்களை விட இமாச்சல பிரதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாகி, எல்லை மாவட்டங்களில் உள்ள நுகர்வோர் வேறு இடங்களில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்படும்,” என்று அவர் கூறினார்.
இந்த மசோதா குறித்து இமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் கூறுகையில், “பொருளாதார ரீதியாக நலிவடைந்த கைம்பெண்கள் மற்றும் அனாதைகளுக்கான நலத்திட்டங்களுக்கு, அரசுக்கு ஒரு நிலையான மற்றும் பிரத்யேகமான வருவாய் ஆதாரம் தேவை.
ரூ.5 என்பது அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பாக மட்டுமே உள்ளது. மாநில அரசு இதைவிட மிகக் குறைந்த தொகையை நிர்ணயிக்க முடியும்” என்றும் அவர் கூறினார்.