போராட்டத்தின் பேனரில் பெண்ணின் சித்தரிக்கப்பட்ட படம்: உடனடியாக நீக்க மெட்டாவுக்கு நீதிமன்றம் உத்தரவு- CJP தலைவர்களுக்கு நோட்டீஸ்

மெட்டா தனது சமூக வலைத்தளங்களில் உள்ள ஆட்சேபனைக்குரிய படங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெட்டா-CJP
மெட்டா-CJP
Published on: 

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். ஒரு மாதமாக போராட்டம் நடத்திய நிலையில் கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் தடியடி நடத்தினர். பின்னர், தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டதால் ஜூலை 25-ந்தேதி போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) முடிவுக்கு கொண்டு வந்தது.

AI மூலம் சித்தரிக்கப்பட்ட படம்

இந்த போராட்டத்தின்போது பல்வேறு பேனர்கள் வைக்கப்பட்டது. இதில் ஒரு பேனரில் பெண் ஒருவர் படம், பிரதமர் மோடியுடன் தொடர்புப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த போட்டோவை அவருடைய அனுமதி இல்லாமல், AI மூலம் சித்தரிக்கப்பட்டு வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த படம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் பரவ ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து அந்த பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம், 23 மணி நேரத்திற்குள் படங்கள் மற்றும் அதன் தொடர்பாக லிங்க் ஆகியவற்றை சமூகவலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மெட்டாவுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த பெண்ணிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று டெல்லி போலீஸ்க்கு உத்தரவிட்டுள்ளது. இந்த தொடர்பான அறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி போலீஸ்க்கு உத்தரவிட்டுள்ளது.

இது ஒரு அசாதாரணமான சூழல். இதில் சம்பந்தப்பட்டிருப்பது ஒரு பெண் மட்டுமல்ல, நாட்டின் பிரதமரே ஆவார். அவர்கள் உணர்வுப்பூர்வமாக நடந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதை நான் உறுதி செய்வேன் என்று நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.

CJP தலைவர்கள் மீது வழக்கு

பெண்ணின் புகாரை தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே, சவுரவ் தாஸ் மற்றும் சிலர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் FIR-ல் அவர்களுடைய பெயர் இல்லை. இருந்தபோதிலும் நீதிமன்றம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com