

கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் மண்ணில் புதைந்து இறந்துள்ளனர்.
தெற்கு குஜராத் கடற்கரையில் இருந்து வடக்கு கேரள கடற்கரை வரை பரவியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக கேரளத்தில் கனமழை பெய்து வருகிறது. 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை இன்றும் நீடித்தது.
தொடர் மழை காரணமாக கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் வௌளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்தன.
பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக சாலைகள் மற்றும் வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் கேரளத்தில் பல பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. 8 மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
மேலும் நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்து 3 பேர் பலியாகி விட்டனர். இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கூடயத்தூர் மசிகல்லேல் பகுதியில் ரவி நாராயணன் என்பவர் தனது மனைவி சுமதி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவரது வீடு இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவில் சிக்கியது. இதில் வீட்டில் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரவி நாராயணன் மற்றும் அவரது மகன் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஆனால் சுமதி பரிதாபமாக இறந்தார்.
வாகமன், கொலஹால மேட்டில் லீலமணி என்பவரது வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டு மண் விழுந்ததில் அங்கிருந்த பிரபாகரன் நாயர் (வயது 72) என்பவர் பரிதாபமாக இறந்தார். பூஞ்சார், தெக்கேக்கரை, பையனித் தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்தது.
இதில் மணக்கட்டு பகுதியை சேர்ந்த ஜோசபின் ஜானி (24) என்ற வாலிபர் பலியானார். அவரது தாயார் ரெஜினா இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில், காயங்களுடன் மீட்கப்பட்டார். உப்புத்தாரா பகுதியில் போலீஸ் ரோந்து ஜீப் நிலச்சரிவில் சிக்கியது. அதில் இருந்த போலீசார், அவசரமாக கீழே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
எரட்டுப்பேட்டை - வாகமன் சாலையில் நிலச்சரிவின் காரணமாக வாகன போக்குவரத்து தடைபட்டது. கோட்டயத்தின் கிழக்கு பகுதி, முனிலவில், கொட்டிக்கல் பஞ்சாயத்து கொடுங்காவு, மீனாச்சில் மற்றும் காஞ்சிரப்பள்ளி தாலுகாக்களின் பல்வேறு இடங்களிலும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அரசு பஸ் டிரைவரின் வீடு ஒன்று முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது.
மழை காரணமாக கொட்டிக்கல் நகரம், முண்டக்காயம் இணைப்பு சாலை, எரட்டுப்பேட்டை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. தொடுபுழா சாலையிலும் தண்ணீர் தேங்கியது. மணிமலை ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, புனலூர் மூவாற்றுப்பேட்டை சாலையில் உள்ள மணிமலை நகரம், மன்னநானி, வழூர் மற்றும் மணிமலை சாலைக்குள் தண்ணீர் புகுந்தது. பல வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கின. காஞ்சிரப்பள்ளி எரட்டுப்பேட்டை சாலையிலும் வெள்ளம் சூழ்ந்தது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும், நீர் தேக்கமும் ஏற்பட்டுள்ளது. இடுக்கியில் ஓடைகள் மற்றும் ஆறுகள் பல இடங்களில் பெருக்கெடுத்து ஓடியதால், சாலைகளையும், குடியிருப்பு பகுதிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.
பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களின் கடற்கரைகளில் உயரமான அலைகளால் கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கடலோர மக்களும் மீனவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.