மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: கட்கோபர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 6 பேர் பரிதாப பலி; மீட்புப் பணிகள் தீவிரம்!

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிகவும் குறுகலான பாதைகளைக் கொண்டதாக இருப்பதால், பெரிய இயந்திரங்களை அங்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Mumbai landslide
Published on

மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நகரின் கிழக்கு புறநகர் பகுதியான கட்கோபர் சிராக் நகரில் உள்ள கௌசியா சால் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. குன்றின் சரிவிலிருந்து பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில், அங்குள்ள குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிகாலையில் நிகழ்ந்த விபரீதம்

பிருஹன் மும்பை மாநகராட்சி மற்றும் தீயணைப்புத் துறை அளித்த தகவலின்படி, இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை சுமார் 3:48 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மக்கள் ஆழந்த உறக்கத்தில் இருந்த நேரத்தில், குன்றின் ஒரு பகுதி திடீரென சரிந்து வீடுகளின் மீது விழுந்தது. தகவல் அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை, மும்பை தீயணைப்புப் படை, காவல்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

கேமராக்கள் மூலம் தீவிர சோதனை

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிகவும் குறுகலான பாதைகளைக் கொண்டதாக இருப்பதால், பெரிய இயந்திரங்களை அங்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

 6 killed in a landslide

இதனால் மீட்புக் குழுவினர் மனித ஆற்றல் மூலமாகவும், சிறிய வாளிகள் மூலமாகவும் இடிபாடுகளை அகற்றும் சவாலான பணியை மேற்கொண்டனர்.

இடிபாடுகளுக்குள் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய நவீன இடிபாடுகளுக்குள் தேடும் 'விக்டிம் டிடெக்ஷன் கேமரா' கருவிகள் பயன்படுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் உடனடியாக ராஜாவாடி மற்றும் பாபா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிவாரண உதவி

சம்பவ இடத்தை மும்பை மேயர் ரிது தவாடே மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறிய மேயர், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுக்காக தலா ரூ. 50,000 நிதி உதவியும் அறிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com