

கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த மழை டெல்லியை புரட்டிப் போட்டு உள்ளது. கடந்த 2 நாளில் டெல்லியில் 107.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கின் காரணமாக நகரின் பல பகுதிகள் பாதிப்படைந்தன.
முக்கிய சாலைகளும் சந்திப்புகளும் வெள்ளத்தில் மூழ்கியதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இன்று காலை பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துவிட்டது. எனினும் கன மழையால் பெரும்பாலான இடங்களில் சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய்கள் சேதமடைந்ததால், பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
குருகிராமில் உள்ள இப்கோ சவுக்கில் பிரதான கழிவுநீர்க் குழாய் உடைந்ததைத் தொடர்ந்து சர்வீஸ் சாலையின் ஒரு பகுதி உள்நோக்கிச் சரிந்தது. இதனால், 10 அடிக்கு 10 அடி அளவிலான பள்ளம் ஒன்று உருவானது. போக்குவரத்து போலீசார் பள்ளம் ஏற்பட்ட பகுதியைத் தடுப்புகள் வைத்து மூடி, வாகனங்களை மாற்று வழிகளுக்குத் திருப்பி விட்டனர்.
மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட இடத்தின் அருகில் மாநகராட்சி முதன்மை கழிவுநீர்க் குழாய் செல்கிறது. அந்தக் கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் உருவாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.