

கேரளத்தில் தொடரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளம் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக மாநிலத்தில் 28 பேர் உயிரிழந்து உள்ளனர். ஏராளமானோர் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 440 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 41 ஆயிரத்து 773 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மழையின் தாக்கம் இன்றும் தொடர்கிறது. மழையின்போது பலத்த காற்றும் வீசியது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
தொடர் மழை மற்றும் நிலச்சரிவு, வெள்ள அபாயம் நிலவி வருவதால், திருச்சூர், பத்தனம்திட்டா, கோழிக்கோடு, கோட்டயம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாட்டில் உள்ள பாய்ஸ் டவுன்–பாலசுரம் சாலையில் இரவு நேர போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.