அரியானாவில் சோகம்: கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் மோதி 3 வாலிபர்கள் பலி - மூவர் படுகாயம்!

எதிரே வந்த ஒரு வாகனத்தின் அதிவேக முகப்பு விளக்கு வெளிச்சம் ஓட்டுநர் நரேந்திராவின் கண்களைக் கூசச் செய்ததாகக் கூறப்படுகிறது.
Car Accident
Published on: 
Summary

அரியானா மாநிலத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர கார் விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல் அறுவடை முடித்து திரும்பியபோது சோகம்

அரியானா மாநிலம் கரோரா கிராமத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் தங்களது விளைநிலங்களில் நெல் அறுவடைப் பணிகளை முடித்துவிட்டு, இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கைதால் நகரை நோக்கி காரில் புறப்பட்டுள்ளனர். காரை நரேந்திரா என்பவர் ஓட்டியுள்ளார்.

முகப்பு விளக்கு வெளிச்சத்தால் நேரிட்ட விபத்து

கார் கைதால் நகருக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒரு வாகனத்தின் அதிவேக முகப்பு விளக்கு வெளிச்சம் ஓட்டுநர் நரேந்திராவின் கண்களைக் கூசச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய கார், கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த கால்வாய் சிறுபாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மிகக் கொடூரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த மோதலின் தாக்கம் மிக பயங்கரமாக இருந்ததால் காரின் ஒரு டயர் தனியாகக் கழன்று ஓடியதுடன், கார் முற்றிலும் நசுங்கி உருக்குலைந்தது.

3 இளைஞர்கள் துடிதுடித்து பலி

காரில் பயணித்த 6 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். பலியானவர்கள் அனைவரும் கரோரா கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நவ்தீப் (19),பிரதீப் (27) அஜய் (22) என்ற மூன்று வாலிபர்கள் உயிரிந்துள்ளனர்.

3 பேர் மருத்துவமனையில் அனுமதி

விபத்தில் படுகாயமடைந்த மற்ற 3 இளைஞர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அர்ஜுன் என்பவருக்குத் தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடை எலும்பு முறிந்த சாஹில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

காரை ஓட்டி வந்த நரேந்திரா முகம் மற்றும் கைகளில் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அரியானா மாநிலப் போலீசார், விபத்துக்கான சரியான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X