ஹரியானா பாடகர் அங்கித் பாலியன் கொலை வழக்கு: குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த உத்தரப்பிரதேச போலீஸ்!

கொல்லப்பட்ட இருவர் மீதும் தலா 50,000 ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது
Ankit Balyan
Published on
Summary

ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மோஹித் மற்றும் சுமித் ஆகிய இரண்டு பயங்கர ஷார்ப்ஷூட்டர்கள் உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லியில் இன்று போலீசாருடன் நடந்த அதிரடி சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கைரானா சாலையில் நடந்த அதிரடி என்கவுண்டர்

ஷாம்லி போலீசார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, கைரானா சாலையில் உள்ள இந்தியன் கேஸ் கிடங்கு அருகே சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, ஹரியானாவின் சோனிபட் பகுதியைச் சேர்ந்த மோஹித் (22) மற்றும் சுமித் (24) ஆகியோரை வளைத்துப் பிடித்தனர்.

அப்போது அவர்கள் தப்பியோட முயன்று போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்குப் பதிலடியாக போலீசார் நடத்திய தற்காப்புத் துப்பாக்கிச் சூட்டில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் ஷாம்லி மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

பாடகர் அங்கித் பாலியன் கொலைப் பின்னணி

பிரபல ஹரியான்வி பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன், கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி மாலை 6:45 மணியளவில் ஷாம்லியின் கோத்வாலி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது தனது காரை நோக்கி நடந்து சென்றபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு ஆயுதமேந்திய கும்பல் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில் படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அங்கித் பாலியன் உடலில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாகவும், அதில் இரண்டு குண்டுகள் அவரது தலையிலேயே பாய்ந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது.

இந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதன்மைக் குற்றவாளிகள் இருவரை இன்று போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட இருவர் மீதும் தலா 50,000 ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com