

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது மனைவி பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகவும், அவரது கொடுமை தாங்க முடியாததால் என்னை கருணை கொலை செய்யுங்கள் என்றும் கலெக்டரிடம் கதறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கலெக்டரிடம் புகார் மனுவும் அளித்துள்ளார். அந்த அனுவில் கிரீட் படேல் கூறி இருப்பதாவது:-
எனக்கும் எனது மனைவிக்கும் 2024-ம் ஆண்டு நவம்பர் 14-ந்தேதி திருமணம் நடைபெற்றது. எங்கள் இருவருக்குமே இது 3-வது திருமணம் ஆகும். எனக்கு ஏற்கனவே முந்தைய மனைவியின் மூலம் பிறந்த குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு எனது மனைவி என்னை சித்ரவதை செய்கிறார். குறிப்பாக பணம் கேட்டு கொடுமைப்படுத்துகிறார்.
எங்களுக்குள் குடும்ப சண்டைகள் நடக்கும் போதெல்லாம் எனது மனைவி, பெண்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை வைத்து எனக்கு எதிராக புகார் அளித்து அடிக்கடி தவறாக பயன்படுத்துகிறார். அவர் முதலில் என்னிடம் தகராறில் ஈடுபடுவார். பின்னர் போலீஸ் அல்லது பெண்கள் உதவி எண்களை தொடர்புகொள்வார். அதன் மூலம் எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்.
எனது முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தையையும் அவர் சித்ரவதை செய்து வருகிறார். அது தொடர்பாக நான் போலீசில் புகார் செய்தேன். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
எனது மனைவி திருமணம் மூலம் பணம் மற்றும் நகைகளை பெற்றுக்கொண்டு, கூடுதலாக பணம் கேட்டு கணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் ஒரு ‘கொள்ளைக்கார மணமகள்’ ஆவார். எனது மனைவி அவரது முந்தைய கணவர்களிடம் இருந்தும் பணம் பறித்துள்ளார்.
மேலும் எனது தாயார் மற்றும் பிற உறவினர்களிடமும் என் மனைவி தொடர்ந்து பணம் கேட்டு அழுத்தம் கொடுக்கிறார். என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு துன்புறுத்தி வருகிறார். எனக்கு எதிராக தொடரப்பட்ட ஜீவனாம்சம் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகள் மூலம் எனக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.
குடும்ப சண்டைகளை எதிர்கொள்ளும் ஆண்களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லை. போலீஸ் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
எனவே எனது பிரச்சனைகளில் இருந்து விடுபட வேறு வழியில்லை. இதனால் விரக்தியின் உச்சிக்கு சென்றுள்ளேன். எனவே என்னை கருணை கொலை செய்து விடுங்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எனது பிரச்சனைகளை தீர்க்காவிட்டால், நான் ஏதாவது செய்து கொள்ள நேரிடலாம்.
இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.