

பணம், பதவி, ஆடம்பர வாழ்க்கை என ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நவீன உலகில், ஆண்டுக்கு ரூ.15 கோடி வருமானம் ஈட்டித் தந்த ஜவுளித் தொழிலை உதறித்தள்ளிவிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஜைன துறவறம் மேற்கொள்ள இருக்கும் சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் ஜஸ்வந்த்கர் கிராமத்தை சேர்ந்தவர் திலீப் பாய் போகர் (வயது 47). இவர் பிழைப்பு தேடி குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஒரே ஒரு சிறிய கடையுடன் தனது ஜவுளி வியாபாரத்தை தொடங்கினார். கடின உழைப்பால் தொழில் வளர்ச்சி அடைந்ததை தொடர்ந்து, மேலும் 2 கடைகளை திறந்து நவீன எந்திரங்களை நிறுவினார். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.15 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டும் பெரிய தொழிலதிபராக உயர்ந்தார்.
தனது ஜவுளித் தொழிலை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்த திலீப் பாய் திட்டமிட்டிருந்தார். அந்த சமயத்தில் ஜைன ஆச்சாரியர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த சந்திப்பு திலீப் பாயின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஜைன மதக் கொள்கைகள் மீது அவருக்கு ஆழமான ஈர்ப்பு ஏற்பட்டது. இதனிடையே அவரது மூத்த மகள் ஷைலி கடந்த 2023-ம் ஆண்டு ஜைன துறவற தீட்சை பெற்று சாத்வி தர்ஷிதா என்ற பெயரில் துறவியாக மாறினார். மகளின் இந்த முடிவு திலீப் பாயின் மனதிலும் ஆன்மிகத் தேடலை அதிகப்படுத்தியது.
இதையடுத்து தனது தொழிலை படிப்படியாக குறைத்துக்கொண்ட திலீப் பாய், தானும் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்தார். இந்த முடிவுக்கு அவரது மனைவி ஜோதி பென் (45) மற்றும் மகள்கள் சவி (22), சார்வி (14) ஆகியோரும் முழு சம்மதம் தெரிவித்ததோடு, தாங்களும் அவருடன் சேர்ந்து துறவறம் ஏற்க தயாராகினர். இதில் சவி வரைகலை வடிவமைப்பில் பிபிஏ படித்து விட்டு கைவினைப் பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். தந்தையின் முடிவை தொடர்ந்து 4 மாதங்களிலேயே அந்த தொழிலை அவர் கைவிட்டார். மற்றொரு மகளான சார்வி 9-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பாதியிலேயே படிப்பை நிறுத்தினார். இவர் சூரத் மாவட்ட அளவிலான கால்பந்து வீராங்கனையாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 2027-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி சூரத் நகரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் திலீப் பாய், அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் என 4 பேரும் முறைப்படி ஜைன துறவற தீட்சை பெற உள்ளனர். இதற்கு முன்னோட்டமாக, துறவற வாழ்க்கையின் கடுமையான விதிமுறைகளை கற்றுக்கொள்ளும் வகையில் ஜைனத் துறவிகளுடன் தங்கி அவர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். காலணி அணியாமல் கால்நடையாக பயணம் செய்வது, எளிய உணவு முறைகளை பின்பற்றுவது உள்ளிட்ட துறவற ஒழுக்கங்களை கடைப்பிடித்து, புதிய ஆன்மிக பயணத்திற்கு அந்த குடும்பத்தினர் தங்களை தயார்படுத்தியுள்ளனர்.