

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், முப்படைகளுக்கான ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியது.
இதில், போர் விமானங்களை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி உளவு வாகனங்கள், ரேடார்கள், பால அமைப்புகள் மற்றும் கண்ணிவெடிகளை இடும் கருவிகள் உள்ளிட்டவை ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்படுகின்றன.
பாதுகாப்பு துறை ஒப்புதல்களின் ஒரு முக்கிய அம்சம், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து, உள்நாட்டு கொள்முதலை ஊக்குவிப்பதும், அரசின் 'ஆத்மநிர்பர் பாரத்' முயற்சிக்கு ஊக்கமளிப்பதுமாகும்.
இது குறித்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "வழங்கப்பட்ட மொத்த தேவை ஏற்பில், ஏறத்தாழ 98 சதவீத கொள்முதல்கள் இந்திய தொழில்துறையில் இருந்தே செய்யப்படும். இது, இந்தியாவில் ஒரு வலுவான பாதுகாப்பு தொழில்துறை தளத்தை உருவாக்குவதில் எங்களது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது," என்றார்.
ராணுவத்தைப் பொறுத்தவரை, CBRN உளவு வாகனங்கள், அதிவேக வாகனங்கள் (HMVகள்), தானாக இயங்கும் இயந்திரக் கண்ணிவெடி இடும் வாகனங்கள், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALHகள்), இழுவை டாங்கிகள் மற்றும் சர்வத்ரா பால அமைப்பு ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
CBRN உளவு வாகனங்கள், CBRN நச்சுப் பொருட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிதல், அடையாளம் காணுதல், கண்காணித்தல் மற்றும் குறித்தல் ஆகிய திறன்களை கொண்டிருக்கும் அதே வேளையில், இழுவை டாங்கிகள் என்பவை, எதிரி கண்ணிவெடிகளில் இருந்து பாதையைத் தெளிவுபடுத்துவதற்காக நிலக்கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்ய வடிவமைக்கப்பட்ட முன்பக்க அமைப்புடன் கூடிய சிறப்பு இராணுவப் போர் வாகனங்களாகும்.
கனரக வாகனங்கள் சவாலான நிலப்பரப்புகளில் செயல்பாட்டுத் திறன்கள், தளவாட ஆதரவு மற்றும் இயங்குதிறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. "இந்த ஏஎல்ஹெச் வாகனங்கள், ராணுவம் மற்றும் இந்திய விமானப்படைக்காக அனைத்து நிலப்பரப்புகளிலும் மற்றும் செயல்பாட்டுச் சூழ்நிலைகளிலும் சிக்கலான பணிகளை நிறைவேற்றும்," என்று அது கூறியது.